கோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள்! இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்

இலங்கையில் இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவிர்ல் கோத்தபாய ராஜபக்ச பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால், இது கோத்தபாய ராஜபக்ச தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிகட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுஜனம முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார், இவர் தான் அடுத்த ஜனாதிபதி என்று உறுதியாகிவிட்டது.

நாட்டின் ஜனாதிபதி ஆகப்போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்த தேர்தலின் சில முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபக்சே ராணுவத்தை கட்டமைத்தவர், பொருளாதாரத்தை மாற்றியவர், முன்னாள் ராணுவ தளபதியும் ஆவார்.

இந்நிலையில் உள்நாட்டு போரில் இறுதிப்போர் நடந்த முல்லைத் தீவில் கோத்தபய ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். வன்னி – முல்லைத் தீவு பகுதியில் சஜித் பிரேமதாச – 47,594 (86.19%) வாக்குகளை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே- 4,252 (7.70%) வாக்குகளையே பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச – 55,585 வாக்குகளையும், கோத்தபய ராஜபக்சே – 3,238 வாக்குகளையும் பெற்றுள்ளார். இது தான் கோத்தபய ராஜபக்சே தரப்பை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முல்லைத் தீவு பகுதியில்தான் இலங்கையில் இறுதிப்போர் நடந்தது. அங்கு போர் அத்துமீறல்கள், குற்றங்கள் அதிகம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பல தமிழர்கள் தங்களின் உறவுகளை, உடமைகளை, வீடுகளை இழந்தனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு குடியேறினர்.

தற்போது அதே முல்லை தீவில் கோத்தபய ராஜபக்சே மிக மோசமாக வாக்குகளை பெற்றுள்ளார். இலங்கையின் தென் பகுதியில் மக்கள் ஆதரவை பெற்றாலும் கூட, வடக்கு மாகாணங்களில் யாரும் எதிர்பாக்காத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.

அவர் வடக்கு மாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெறவில்லை. ஆனால் சஜித் பிரேமதாச பல வடக்கு மாவட்டங்களில் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குகளை பெற்று இருக்கிறார். இதன் மூலம் தமிழர்கள் இன்னும் கோத்தபய ராஜபக்சேவை ஏற்கவில்லை என்று தெரிகிறது.