ஜனாதிபதி கோத்தபாயவிற்கு பகிரங்க மடல் எழுதிய யாழ் பொது மகன்

அண்ண்மையில் இடம்பெற்ற இலங்கை சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபாய விற்கு சில கருத்துக்களையும், சில சந்தேகங்களையும் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் மகன் திறந்த மடல் ஒன்றை எழுதி உள்ளார்.

அதன் முழுவடிவமும் வருமாறு:

மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு மனந்திறந்த மடல்.

ஜயா, நாம் பல காலமாக பலவிதமான அடக்குமுறைகளுக்குள் அகப்பட்டு இழக்கக் கூடாத பலவற்றை இழந்தும் தொலைக்கக் கூடாதவற்றை தொலைத்தும் எவராவது எம்மை காப்பாற்ற மாட்டார்களா எமக்கான நியாயத்தை பெற்றுத்தருவார்களா என்ற ஏக்கத்தோடு ஒருவர் பின் ஒருவர் என பலரை நம்பியும் ஏமாந்தும் மிகிதமுள்ள சிலவற்றை இறுகப்பிடித்து வாழ்ந்து வருகின்றோம்.

பல அரச தலைவர்கள் பதவிக்கு வந்து போனார்கள் ஆனால் தமிழ் மக்களை நன்கு படித்தவர் நீங்கள்தான் இல்லையேல் யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியாது. முழுவதுமாக தமிழர்களாகிய எம்மைப்படித்து பலம் எது பலவீனம் எது என நன்கு கணித்ததன் விளைவே யுத்தம் முள்ளிவாய்க்காளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யுத்தம் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அபிலாசைகளும்தான்.

அதனைத்தொடர்ந்து நாட்டில் பல அபிவிருத்திகள் செய்யப்பட்டது வடக்கிலிருப்பவர் தெற்கிற்கும் தெற்கிலிருப்பவர் வடக்கிற்கும் என தடையின்றி உலா வந்தனர்.

ஆயினும் யுத்ததின் போது நாம் கொடுத்த விலை அதிகம் சுமந்த வலிகள் அதிகம் கந்தகம் நிறைந்த இரும்புக் குண்டுகள் நீதி நியாயமின்றி அப்பாவிகளை கொன்று குவித்தது. நாங்கள் அப்பாவிகள் என்று தெரிந்தும் யுத்த நிறைவு எனும் இலக்கு எம்மை பல வகையில் இல்லது ஆக்கியது.

இராணுவத்தினர் புலனாய்வினர் என பாராபட்சமின்றி எம்மை களையெடுத்தனர் இன்றுவரை அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் வீடு வரவில்லை என்ற ஏக்கத்துடனும் எங்காவது அவர்கள் உயிருடன் இருந்து வந்துவிட மாட்டார்களா எனும் நப்பாசையுடன் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. இந்த ரணங்கள் இலகுவில் ஆறிவிட முடியாதவை முற்களைப்போல் தினம் தினம் எங்கள் மனங்களை நெருடிக்கொண்டுதான் இருக்கறது

இவை அனைத்தையும் அறிந்த உன்களாலேயே அனைத்து வலிகளுக்கும் நிவாரணி கொடுக்க முடியும்.,

நல்ல தலைவன் பாராபட்சமின்றி அனைத்து மக்களையும் தன் மக்கள் என நடத்துபவனாக அவரவர் அபிலாசைகளை உணர்வுகளை மதித்து நடாத்துபவனாக, குறைகளை அறிந்து தீர்ப்பவனாக மனிதவடிவத்திலான இரட்சகனாக இருக்க வேண்டும்.

மக்கள் மனங்களை வெல்வது ஒன்றும் கடுமையானது அல்ல அதுகும் தமிழ் மக்களின் மனங்கள் மிகவும் மென்மையானவை அவற்றை வெல்வது மிக எளிது.

உதாரணமாக, கடந்த காலங்களில் மாவீரர் நாள் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது, அதே உணர்வு மதிப்பினை தாங்கள் முழுமனதோடு எந்தவித தடங்கலுமின்றி அனுஸ்டிக்க அனுமதிப்பது அல்லது தடைபோடாது இருப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றை தாங்கள் வழங்கியதற்கு சமனாக மக்கள் உணர்வார்கள். இல்லையேல் இதனை முன்னிறித்தி அரசியல் செய்ய பலர் காத்துக்கிடக்கிறார்கள்.

கடந்த கால கசப்பாண அனுபவங்கள் தங்களை சந்தேகக் கண்ணோடே பார்க்க வைக்கிறது, பெரும் அச்ச உணர்வினை மக்கள் மத்தியில் தோற்றுவித்து நிற்கிறது. இதனை தாங்கள் நன்கு அறிவீர்கள் மாத்திரமல்லாது தேர்தல் முடிவுகள் உங்களுக்கு படம்போட்டு காட்டி நிற்கிறது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அதிகளவு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதனை வைத்து தாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களை விரோதியாக கருதிவிடாதீர்கள். காரணம் தாங்கள் பாதுகாப்பு செயலராக இருந்த போதே உக்கிர யுத்தம் கோர தாண்டவத்தோடு முடிவிற்கு வந்தது பலர் உயிர்களை தொலைத்தோம் பலரை உயிருடனும் தொலைத்தோம். இந்த அச்சமும் ஆறாவடுவும் ஒரு காரணம். அத்தோடு

தேர்தல் காலத்தில் வடக்கு மக்களுக்கு ஊடகங்கள், தமிழ் அரசியல் தலைவர்கள், சிங்கள அரசியல் தலைவர்கள் என பாராபட்சமின்றி தாங்கள் தொடர்பாக பீதியை உண்டாக்கி கடந்த காலங்களை ஒப்பிட்டு காட்டின உச்சக்கட்டமாய் சிலர் ஊடகம் முன் தோன்றி வாக்குமூலம் வேறு கொடுத்தார்கள் இவை போதாதா நாம் அச்சம் கொள்ள?? எங்களில் எந்தப் பிழையும் இல்லை… மீண்டும் அந்த நாள் திரும்பவும் வந்துவிடக்கூடாது எனவே பிரார்த்தித்தோம் இதுவே ஜதார்த்தம்.

இல்லை மக்களே, நீங்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை, கடந்த காலத்து கசப்பான அனுபவங்கள் ஒரு போது நடைபெறாது, அனாவசிய கைதுகளுக்கும், விசாரணைகளுக்கு ஒருபோதும் இடமில்லை உங்கள் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கிறேன் எனும் ரீதியில் தங்களின் செயற்பாடு நிலைப்பாடு வருகின்ற இரண்டு மாதத்திற்க்குள் தாங்கள் நிரூபிப்பீர்களேயானால் எம் மக்கள் உங்கள் பின்னால் திரள்வதற்கு ஆயத்தமாவார்கள்.

ரணில் விக்கிரம சிங்க ஜயாவுடைய அரசு தமிழ் மக்களுக்கு என்ன செய்தது?! என்ன கொடுத்தது!? முன்னால் நல்லாட்சி ஜனாதிபதியும், அரசும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தது??!! என்ன கொடுத்தது??

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு ஏதேனும் தந்ததா?? “இல்லை” ஆனால் குறைந்த பட்சம் முன்னரைவிட ஓரளவு தமிழ் மக்கள் அச்சமும் இன்றி வாழ்ந்தார்கள் அவ்வளவுதான் நல்லாட்சி அரசு தமிழருக்கு தந்தது. அந்த நின்மதி எனும் ஒற்றை உணர்வையாவது தக்கவைத்துக்கொள்ளவே அவர்கள் ஆசைப்பட்டார்கள் காரணம் தமிழ் மக்களின் உரிமைசார் பிரச்சனைக்கான தீர்வை ரணில் ஜயா வழி நடத்தும் அரசால் தந்துவிடவும் முடியாது, எம் தமிழ் அரசியல் தலைவர்கள் பெற்று தரவும் போவதில்லை என்பதனை நன்கு புரிந்து உணர்ந்து இருந்தார்கள். ஆனாலும் கிடைத்த நின்மதிக் காற்றையேனும் சுவாசிக்கலாம் எனும் எதிர்பார்ப்பு மாத்திரமே இருந்தது.

நிரூபிக்க வேண்டும் நீங்கள் நிரூபிக்க வேண்டும். எனது ஆட்சியில் முன்னரைவிட அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

முன்னர் செய்ததைவிட நாட்டுக்கான அபிவிருத்தியினையும் வடக்கிற்கான வசந்தத்தையும் வழங்க வேண்டும். இளைஞர் யுவதிகள் வளம்பெற வேண்டும், உங்கள் காலத்தில் நடந்த யுத்தத்தால் நலிவுற்ற.நம் மக்களை நீங்களே உயர்த்த வேண்டும்.

பெரும்பாண்மை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அரியனை ஏறியிருக்கிறீர்கள், நீங்கள் நல்லதே.செய்வீர்கள் என சிங்கள மக்கள் நம்புகின்றனர் இப்படிப்பட்ட உங்களாலேயே தமிழ் மக்களாகிய நாம் கோரு உரிமை நியாயமானது என அவர்களுக்கு புரியவைத்து எந்த இனத்திற்கு எந்த பாதிப்பும் பாராபட்சமும் இன்றி நியாயமான எம் உணர்வுகளை மதித்து தீர்வினை பெற்றுத்தர வேண்டும்.

எந்த ஒரு கருமத்தை கையிலெடுத்தாலும் அதனை அதி திறம்பட செய்து முடிப்பவர்கள் நீங்கள் என்பது கடந்த காலங்களில் நாம் கண்டுகொண்டோம். அத்தகைய திறமையை எமக்கான உரிமைக் கோரிக்கையிலும் செலுத்துங்கள்.

அடுத்துவரும் தேர்தல் தமிழ் மக்களின் வாக்குக்கள் சொல்லும் நீங்கள் நியாயமான நீதியான பாராபட்சமின்றிய தலைவனாக நாட்டை ஆண்டீர்களா என்று.

எம் இனம் உங்காளிடத்திலேயே அதிகமானதை தொலைத்தது அதனை திருப்பிக் கொடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பும் கடமையும் உங்களிடத்திலேயே உள்ளது.

வரும் மாவீரர் தினம் சொல்லும், மறுபடியும் முதலே இருந்தா, இல்லை மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஒன்று என்றா என்று.

உங்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு சுபீட்சமான ஆட்சி கிடைக்கும் எனும் பெரு நம்பிக்கையிலும் தங்களுக்கு புரிந்ததை மேலும் நினைவுறுத்தவுமே இந்த மடலை வரைகிறேன். உங்களிடம் உரிமையுடன் என் உள்ளக் கிடக்கையினை பகிர்ந்துகொள்வதற்கான, கோரிக்கையினை முன்வைப்பதற்கான உரிமை எனக்கும் இருக்கின்றது. அதற்கான தகுதியும் என்னிடமுள்ளது என நம்புகிறேன்.

அன்பிற்குரிய யாழ் பொதுஜன பரமுன உறுப்பினர்காளே இந்த மடலை மதிப்புற்குரிய ஜனாதிபதியின் கைகளுக்கு அல்லது பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி,இப்படிக்கு,உண்மையுள்ளஉங்கள் மீது நம்பிக்கைவைத்துள்ள ஜெய. சைலஜன்.