தமிழர்கள் யாரும் ஒருபோதும் புதிய ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள்!

நவம்பர் 19, 2019 அன்று கோட்டாபய ராஜபக்ச கூறிய ‘இலங்கையர்’ என்ற பதம் தமிழ்மக்கள் சிங்கள- பெளத்த நாடு எனும் அடையாளத்திற்குள் கரைந்து போகும் பாதையை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

அவரது கருத்தை எப்போதும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏற்றுக் கொள்ளவும் முடியாதெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தனது முதலாவது உரையில் சிங்கள மக்களின் வாக்குகளால் தான் ஜனாதிபதித் தேர்தலில் வென்றதாகவும், தமிழ்- முஸ்லிம் மக்களைத் தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்ட போதும் வாக்களிக்க மறுத்துவிட்டதாக கூறியதுடன் அனைவரும் இலங்கையர் எனும் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தன்னுடன் இணையுமாறு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.

இதுதொடர்பில் எமது செய்திச் சேவைக்கு இன்று(19) விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களைப் பொறுத்த வரை கோட்டாபயவின் கருத்துடன் நாம் இணங்க முடியாது. தற்போதுள்ள இலங்கை அரசு மட்டும் பிரச்சினைக்குரியதொரு விடயமல்ல. தனிப்பட்ட ரீதியில் கோட்டாபய ராஜபக்ச கூடப் பொறுப்புக் கூற வைக்க வேண்டியதொரு நபராகவுள்ளார்.

கோட்டபாய ராஜபக்சவின் கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பிலொரு சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு அந்த விசாரணையில் அவரொரு குற்றவாளியில்லை என்ற விடயம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மாத்திரம் தான் அவர் தொடர்பாகத் தமிழ்மக்களொரு மாற்றுச் சிந்தனையை நோக்கிச் செல்வது தொடர்பாகப் பரிசீலிக்கலாம்.

சிங்கள தேசத்துடன் தமிழ்த்தேசம் இணைந்து பயணிப்பதில் எந்தவிதமான தடைகளும் இருக்கக் கூடாதெனில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்த்தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்த்தேசம் பாதுகாப்பாக இந்தத் தீவிலிருக்கலாம் என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் தான் அந்தப் பயணம் நேர்மையானதும், உண்மையானதுமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.