வீதியில் விழுந்து கிடந்த யுவதி …கையெழுத்து வைத்துவிட்டு காணாமல் போன அம்யூலன்ஸ் சாரதி ! அம்பலப்படுத்திய மாநகரசபை உறுப்பினர்

யாழ்ப்பாண மாநகரசபையின் செயற்திறன் என்னவென்பதை யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

பெரும் நிதி வருமானம், முதல்வர் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுலா, புதிய கட்டடம் என ஆடம்பரம் காண்பித்தாலும், மாநகரசபையின் சாதாரண செயற்பாடுகளின் வினைத்திறன் தொடர்பான கேள்வியை உறுப்பினரின் பதிவு எழுப்பியுள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்த செய்தி இது-

இன்று யாழ்.மாநகர சபையில் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. மத்தியம் 2.30 மணியளவில் அவ் அமர்வு முடிவடைந்து வெளியேறும் போது யாழ்.மாநகர சபையின் பிரதான் வாசலுக்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் தலைப்பகுதியில் அடிபட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் நடுவீதியில் விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அம்புலன்ஸ்கு அறிவியுங்கள் என்று கதறினார்கள்.

யாழ்.மாநகர சபைக்கு மிக அருகில் ஏறத்தாழ 50 மீற்றர் தூரத்தில் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு காணப்படுகின்றது அங்கு அம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என்பதன் அடிப்படையில் நான் தீயணைப்பு பிரிவினை நோக்கி ஓடிச் சென்றேன்.

அங்கு அம்புலன்ஸ் நின்றது. அங்கிருந்த பணியாளரிடம் ஒரு விபத்து நடைபெற்று விட்டது நிலமை கவலைக்கிடமாக உள்ளது உடனடியாக அம்புலன்ஸ எடுங்கள் என்றேன். அப்போது சக உறுப்பினர்கள் தனுஜன் மற்றும் சுபாதீஸ் அவர்களும் தீயணைப்பு பிரிவிற்கு வந்து விட்டார்கள்.

அங்கு பணியாற்றுகின்ற ஊளியர் அம்புலஸ் வாகனத்தின் சாரதியை தேடுகின்றார் சாரதி பணியில் இல்லை இரண்டு சாரதிகள் நியமிக்கப்பட்டிருந்தும் அவர்கள் அன்றைய தினம் கையொப்பம் இட்டிருந்தும் குறித்த நேரத்தில் பணியிடத்தில் இருக்க வில்லை.

சாரதிகள் இல்லை என்பதை உணர்ந்த பணியாளர் தான் வாகனத்தை எடுப்பதாக கூறிக் கொண்டு அம்புலஸ் வாகனத்தின் சாவியினைத் தேடுகின்றார் சாவி எங்கும் இல்லை. எங்கு தேடியும் சாவி கிடைக்கவில்லை.

அப்போது அங்கு வந்த இன்னொரு பணியாளர் அம்புலஸ் வாகனச் சாவி இங்கு இல்லை அது யாழ்.மாநகர சபை அலுவலகத்தில் இருக்கின்றது என்று கூறிக் கொண்டு அதனை எடுப்பதற்கு யாழ்.மாநகர சபை அலுவலகத்திற்கு ஓடிச் சென்றார்.

சிறிது நேரத்தில் சாவியுடன் வந்தார். அந்த சாவியை கொண்டு அம்புலஸ் வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் நீண்ட நேரமாக அம்புலஸ் வானம் வரும் என்று எதிர் பார்த்திருந்து பொறுமையிளந்த மக்கள் அவசர நிலமையைப்புரிந்து கொண்டு குறித்த யுவதியை ஒரு முக்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டார்கள்.

இது தொடர்பில் சக உறுப்பினர் அருள்குமரன் முதல்வர் அவர்களிடம் முறையிட்டும் உள்ளார்.

அம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் ஆடம்பரவாகனமோ அல்லது முக்கியமற்ற வாகனமோ அல்ல. அது உயிர்காக்கவல்ல வாகனம் அதன் முக்கியத்துவம் கருதியே வீதியில் அம்புலஸ்வாகனம் வரும் போது அனைவரும் வழிவிட்டு கொடுப்பார்கள் அதில் செல்லும் நபர் உயிர் பிழைக்கவேண்டும் என்ற காரணத்திற்காக இது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

அந்த வகையில் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய ஒரு வாகனம் பூட்டப்பட்டு அதன் திறப்பு வேறு ஒரு அலுவலகத்தில் பத்திரமாக இருக்கும் நிலையும் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவ் வாகனத்திற்குரிய சாரதிகள் பணிக்கு வந்திருந்தும் பணிநேரத்தில் பணிசெய்யும் இடத்தில் இல்லாதததும் யாராலும் எந்த காரணத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ்.மாநகர சபைக்கு முன்னாள் நடைபெற்ற ஒரு விபத்தில் பலந்த காயமடைந்த பெண்மணியை அதற்கு மிக அருகில் யாழ்.மாநகர சபையின் உயிர் காக்கும் அம்புலஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தும் அதன் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதை நினைக்கும் போது அந்த யாழ்.மாநகர சபையின் ஒரு உறுப்பினராக நான் வெட்கித் தலைகுனிகின்றேன்.