நடுராத்திரி எழுப்பி.. விடிய விடிய வீடியோ எடுப்பாங்க..! ரகசியத்தை அம்பலப்படுத்திய நித்யானந்தா சீடர்

நன்கொடை பெற்றுதரக் கூறி தொல்லை கொடுத்ததாக நித்யானந்தா ஆசிரமம் மீது சிறுமி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தா தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பல பல ஆசிரமங்களை நிறுவி, மிகப்பெரிய அளவில் ஆன்மீக சாம்ராஜ்யம் செய்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் மீது பல சர்ச்சைகள் இருக்கும் பட்சத்தில், எதைப்பற்றியும் யோசிக்காது தனது வேலைகளை பார்த்து வருகிறார் நித்யானந்தா.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தன் மகள் உட்பட பல சிறுமிகளை கடத்தி வைத்துக்கொண்டு, அவர்களை துன்புறுத்துவதாக, பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடுத்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் அவர்களை மீட்கும்படி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறுமிகளை போலீசார் மீட்டதோடு, அங்கு பணிபுரிந்த நித்யானந்தா ஆசிரமத்தின் ஊழியர்களையும் கைது செய்தனர்.

இப்படி மீட்கப்பட்ட சிறுமிகளில், வழக்கை தொடுத்த நபரின் 15 வயது சிறுமியும் இருந்தார்.

இந்நிலையில், ஆசிரமத்தில் நிகழ்ந்த கொடுமைகள் குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்றேன், ஆரம்பத்தில் ஆசிரம வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவே சென்றது.

ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து எங்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். அதாவது எங்களை நித்யானந்தா பேரிலும், அவரது ஆசிரமத்தின் பேரிலும் நன்கொடை பெற்று தரச் சொல்லி நிர்வாகம் தரப்பு மிரட்ட தொடங்கியது.

லட்சக்கணக்கில் ஒவ்வொருவரும் வாங்கித் தர வேண்டும். இல்லை எனில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கித் தர வேண்டும்.

இதற்காக, அடிக்கடி எங்களை நள்ளிரவில் கூட உறங்கவிடாமல் அலங்காரம் செய்து, நகைகளை அணிவித்து, நித்யானந்தாவிற்காக புரோமோஷன் வீடியோவில் நடிக்கச் சொல்லி மிரட்டுவார்கள்.

இதற்கு மறுப்பு தெரிவித்தால், எங்களின் பெற்றோரை தரக்குறைவாக திட்டுவதோடு, எங்களுக்கு உடல் ரீதியாகவும் டார்ச்சர் தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.