இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை திட்டமிடு தூண்டிவிட்ட சிங்கள பவுத்த பிக்குகள்!

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு சிங்கள பவுத்த பிக்குகளே தலைமை தாங்கி நடத்தியிருக்கின்றனர்.

கண்டியில் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் சிங்கள ஓட்டுநர் குமாரசிங்க என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அந்த ஓட்டுநர் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தூண்டிவிட்ட பிக்குகள்
வன்முறையில் பிக்குகள்

பலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் கண்டிக்கு பயணம் செய்த பின்னரே வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இவர்கள்தான் வன்முறைகளை தூண்டிவிட்டவர்கள் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் குற்றம்சாட்டியுள்ளார்.

திகண, தெல்தெனிய உட்பட கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறைகள், ஆர்ப்பாட்டங்களுக்கு சிங்கள பவுத்த பிக்குகளே தலைமையும் வகித்தனர். மேலும் வன்முறைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 24 சிங்களரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தலைமை வகித்திருக்கிறார்.

உயிரிழந்த சிங்கள ஓட்டுநர் அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் உறவினர் என்பதால் வன்முறைகளைத் தூண்டிவிட்டிருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறைகளை தூண்டிவிட்ட பவுத்த பிக்குகளை கைது செய்ய அமைச்சர் ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.