நவீன ரோபோவை உருவாக்கி வவுனியா மாணவி ரோகிதா புஸ்பதேவன் சாதனை! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா, சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ரோகிதா புஸ்பதேவன் இரத்த பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி (AUTO NEEDELINJECTOR) முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மாகாண ரோபோ போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும், பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரோகிதா ஈடுபட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த ரோகிதா, தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.

, மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு கண்டுபிடிப்பில் ஈடுபட்ட போதிலும், போதியளவு நிதி வசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையிலேயே ரோகிதா புஸ்பதேவன் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் சாதனை படைக்கமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவியின் சாதனை குறித்து பாடசாலை அதிபர் தெரிவிக்கையில்,

பாவனைக்கு உதவாத கழிவுப்பொருட்களை தனது கண்டுபிடிப்புகளுக்காக குறித்த மாணவி பயன்படுத்தி ,மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், , பாடசாலைக்கும் பெருமையைத் தேடித்தந்துளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாணவி ரோகிதாவின் கண்டுபிடிப்பை மேலும் மெருகூட்டி, அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு சில பொருட்களை வெளிநாட்டில் இருந்து பெறவேண்டியுள்ளதாக தெரிவித்த அதிபர் ,அதனை பெறுவதற்கான முயற்சியில் மாணவி ரோகிதா ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மாணவியின் இந்த கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கான முயற்சிகளிலும் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவியின் இந்த சாதனைக்கு பாடசாலை சமூகமும், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.