முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல

தெல்தெனிய, திகண பகுதிகளில் நடந்த வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “திகண, தெல்தெனிய சம்பவங்களின் விளைவாக அரச புலனாய்வுச் சேவைகள் வீழ்ந்து விட்டன.

சில வெளிநபர்களால் தான் இந்த நிலை உருவாக்கப்பட்டது. அவர்கள் எந்தப் பகுதியில் இருந்து வந்தார்கள் என்பது காவல்துறையினருக்குத் தெரியும். அதுபற்றி எமக்கும் கூடத் தெரியும்.

ஆனால் ஏற்படவிருந்த வன்முறைகள் பற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் இருட்டில் இருந்தனர்.

மதத் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர். சில வர்த்தகர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் முன்வைந்தனர்.

ஆனால் வெளியில் இருந்து வந்த சிலர் அந்த முயற்சிகளை குழப்பி வன்முறைகளைத் தூண்டி விட்டனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வெளியில் இருந்து வந்த குழுவினரே வன்முறைகளை நிகழ்த்தினர் என்றும் திகண, தெல்தெனியவில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களில்லை என்றும் நாடாளுமன்றத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like