சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டது இதற்காகவா? தகவலை வெளியிட்ட சுவிஸ் செய்தித்தளம்

கடந்த சில தினங்களின் முன்னர் இலங்கையின் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை சுவிஸ் வலைத்தளமான SWI உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை சுவிஸ் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அடையாளம் காணப்படாத குழுவினால் கடத்தப்பட்ட பெண் அதிகாரியிடம் சுவிஸ் தூதரகம் தொடர்பான தகவல்களைப் பெற அவர்கள் முயற்சித்ததாகவும் அந்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது குறித்து விசாரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவிஸ் அரசாங்கம், இலங்கை அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சக ஊடகப் பேச்சாளர் பியரே -எலன் எல்சின்கர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

கடத்தல் தொடர்பாக வெளியான தகவல்களை மேற்கோளிட்டு, சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தூதர் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

கடத்தப்பட்ட பெண் அதிகாரி சில மணிநேரங்களுக்குப் பின்னர் விடுவிக்கபட்டிருந்த நிலையில் அவரிடம், நாட்டைவிட்டு வெளியேறி சுவிட்சர்லாந்திற்கு சென்ற சிஐடி நிஷாந்தா சில்வா குறித்து விசாரித்ததாகவும் ட்செய்திகள் வெளியாகி இருந்தன.

கடத்தப்பட்ட பெண்ணிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சித்த தகவலின் படி CID அதிகாரி நாட்டில் இருந்து தப்பி செல்லவேண்டிய காரணம் அவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் எனவும் சுவிட்சர்லாந்து பத்திரிகையான Neue Zürcher Zeitung (NZZ) மேற்கோள்காட்டி அந்த செய்தித்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் நிஷாந்தா சில்வா ஈடுபட்டுள்ளதாக NZZ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த CID அதிகாரி சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓடிய பின்னர் அங்கு புகலிடம் கோரி அகதி அந்தஸ்தையும் நாடுவதாகவும் குறித்த தளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.