செலவுக்கு பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன்..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 49). இவரது மனைவி ராஜகுரு (42). இவர்களுக்கு ராஜ்குமார் (18) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் தாய் ராஜகுரு தேயிலை தோட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வேலை செய்தார். அப்போது அங்கு வந்த மகன் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தாயை தாக்கினார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தாயை அடித்துக்கொன்றது குறித்து தந்தையிடம் கூறினார். அவர் மகனை காப்பாற்றும் நோக்கத்தில் மனைவி அணிந்திருந்த நகையை அறுத்து அருகில் உள்ள வீட்டுக்கு முன்பு போட்டார்.

மனைவியின் உடலை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் மறைத்தார். நகைக்காக மனைவியை கொன்று விட்டதாக நாடகமாடாலாம் என்று தந்தையும், மகனும் திட்டமிட்டனர்.

ஆனால் வீட்டின் முன்பு நகை கிடந்ததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து மூணாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜகுருவை தேடியபோது தேயிலை தோட்டத்தில் பிணமாக அவரது உடலை மீட்டு மூணாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த மூணாறு டி.எஸ்.பி. ஜோபி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார்.

தந்தையும், மகனும் தாயின் கொலை குறித்து விசாரிக்க ஒத்துழைப்பு கொடுக்காமல் அலட்சியம் காட்டினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தங்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தந்தையும், மகனும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மூணாறில் பதுங்கியிருந்த மணிக்குமார் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். மனைவியை மகன் கொலை செய்ததும், அந்த பலியை பக்கத்து வீட்டுக்காரர் மீது போட முயன்றதையும் தந்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.