நடுக்கடலில் பயணிகளோடு ஓடிவிளையாடிய படகு: பயத்தில் பதறிய மக்கள்- நெடுந்தீவில் சம்பவம்!

நெடுந்தீவு – குறிகாட்டுவானுக்கு இடையில் நேற்று பிற்பகல் பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தீவு கடற்றொழில் சமாசப் படகு நடுக்கடலில் ஆபத்தான வகையில் சாரதி படகைச் செலுத்தியதால் பயணிகள் பயத்தால் பதறினர்.

நெடுந்தீவில் பயணிகளை ஏற்றுவதற்கான அனுமதியற்ற நெடுந்தீவு கடற்றொழில் சங்கத்தின் கூளர் படகு நேற்று பிற்பகல் நெடுந்தீவில் இருந்து 2.30 மணிக்கு பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்தது.

சுமார் 100 வரையான பயணிகளோடு நெடுந்தீவில் இருந்து பயணித்த படகை குறிகாட்டுவானில் இருந்து 2 கிலோ மீற்றர்கள் தொலைவில் நெடுந்தீவின் இன்னுமொரு தனியார் படகு 10 வரையான ஆட்களுடன் நெடுந்தீவு நோக்கி புறப்பட்டது.

இதன்போது குறித்த படகில் தமது படகு நேரத்துக்குரிய பயணிகளை ஏறிறிச் செல்வதாக தெரிவித்த சமாசப் படகு சாரதி படகினை திடீரென நடுக்கடலில் ஆபத்தான முறையில் திருப்பி குறித்த படகை விரட்டிச் சென்றார்.

இந்நிலையில் படகு திடீரென நடுக்கடலில் திருப்பப்பட்டமையால் படகு அலைகளுடன் மோதி தத்தளித்தமையால் பயணிகள் பயப்பீதியில் அலறினர்.

பெண்கள், சிறுவர்கள் பளத்தில் உறைந்துபோயினர்.
படகு சாரதியின் செயற்பாடு குறித்து கேள்வியெழுப்பிய பயணிகளை படகு ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதுடன் படகை தாம் நினைத்தால் மீண்டும் நெடுந்தீவுக்கே கொண்டு செல்வோம் என்று தெரிவித்தனர்.

மேலும் சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக படகை நெடுந்தீவு நோக்கி சென்ற படகை விரட்டிச் சென்று குறித்த படகின் அருகில் சென்று அப்படகில் இருந்தவர்கள் எத்தனை பேர் எனக் கணக்கெடுத்ததன் பின்னர் மீண்டும் குறிகாட்டுவான் நோக்கி படகைச் செலுத்தினர்.

குறித்த செயற்பாட்டால் பயணிகள் கடும் விசனமடைந்ததுடன் பயணிகளை ஏற்றுவதற்கான அனுமதியற்ற படகை சேவையில் ஈடுபடுத்த அனுமதியளித்தவர்கள் யார்? ஏனக் கேள்வியெழுப்பியதுடன் மீன் பிடிக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குறித்த படகை பயணிகள் சேவையில் ஈடுபடத்தக் கூடாது என்பதை அங்கு இருக்கும் அதிகாரிகள் அறிந்திருக்கும் நிலையில் யாருடைய செல்வாக்கில் பயணிகளை ஏற்றத் தகுதியற்ற படகு சேவையில் ஈடுபடுகின்றது எனவும் தெரிவித்தனர்.

மேலும் நெடுந்தீவில் குமுதினிப்படகு, நெடுந்தாரகை, வடதாரகை, சமுதத்திராதேவி போன்ற பயணிகள் படகு இருக்கும் நிலையில் ஏன் மீன் பிடித்தலுக்கு பயன்படுத்தும் கூளர் படகை பயணிகள் சேவையில் ஈடுபடுத்துகின்றனர் என்பது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த படகு சாரதியின் தகமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மீளாய்வு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலரிடம் வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில் படகுக்கு எதிராக அரசஅதிபருக்கு தகவல் வழங்கி விட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like