மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை

பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள விகாரையில் பிரதிஷட்டை செய்வதற்காக புதிய புத்தர் சிலை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற நாயாறு குருகந்த ரஜமகா விகாரை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சுமார் 3.5 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையில் எந்தவித கட்டுமான பணிகளும் மாற்றங்களை செய்ய முடியாத அளவுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் இன்று புதிதாக 3.5 அடி உயரமான குறித்த மூலஸ்தானத்துகான புத்தர் சிலையை கொண்டுவந்து இன்றைய தினம் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றதோடு விகாரைக்கான பல்வேறு தளபாடங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருகந்த ரஜமகா விகாரை, சூரியபுர சமநலபாலம ரஜமகா விகாரை விகாராதிபதி திருகோணமலை பிரதான சங்க நாயக்கர் கந்தளாய் சோமபுர வித்தியாலயத்தின் முதல்வர் வணக்கத்துக்குரிய புரரத்னதேவ கீர்த்தி தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

குறித்த அப்பகுதியில் இந்து மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டு தரப்பினரையும் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதும் உரிய அனுமதி இல்லாமல் எந்தவிதமான கட்டுமானங்களையும் மாற்றங்களையும் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளதோடு தற்போது இருக்கின்ற நிலைமைகளை வீடியோ பதிவு செய்து வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த நிலைமைகள் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இவ்வாறாக மூலஸ்தானத்திற்கு புத்தர் சிலை உட்பட பல்வேறு தளபாடங்கள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று ஆட்சிமாற்றம்இடம்பெற்ற நிலைமையில் குறித்த ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விகாரைக்கு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டது என்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம் என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.