13வது திருத்தத்தம் தொடர்பில் முக்கிய விடயத்தை கூறிவிட்டு விமானம் ஏறிய கோட்டாபய

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த மாட்டோம் என இந்தியாவில் வைத்தே தெரிவித்து விட்டு, இலங்கைக்கு விமானம் ஏறி வந்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இந்து பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில், 13வது திருதத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட சில விடயங்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலின் முன்னர் குறிப்பிட்டதை போல, தமிழ் மக்களிற்கு இருப்பது பொருளாதார பிரச்சனை என்பதை போன்ற அர்த்தத்திலேயே, இனப்பிரச்சனை தீர்வு குறித்த கேள்விகளிற்கு பதிலளித்துள்ளார்.

வெள்ளை வாகன கடத்தல் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்துள்ளார்.

அவரது பேட்டியின் ஒரு பகுதியில்…

வெள்ளை வாகன கடத்தல், பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் பற்றி என் மீது சுமத்தப்படுவவை போலியான குற்றச்சாட்டுகள். நிச்சயமாக அப்படி எதுவும் என்னால் செய்யப்படவில்லை. 2009 க்குப் பிறகு, நாங்கள் குற்றச்சாட்டுகளைப் மீளாய்வு செய்ய முயற்சித்தோம், ஆனால் அது கடினம்.

நாங்கள் பொறுப்பல்ல என்றபோதும், குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிஐடியை நாங்கள் கேட்டிருந்தாலும், அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இவை உண்மையென்றால், மைத்திரிபால அரசாங்கம் ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவில்லை?

உண்மை என்னவென்றால், போரின் போது நாங்கள் பத்திரிகையாளர்களைப் பற்றி கண்டிப்பாக இருந்தோம், ஆனால் அமைதி காலத்தில் அல்ல. மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போரைத் தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாங்கள் போரை முடித்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முந்தைய ஜனாதிபதிகளிடம் ஏன் கேட்கப்படவில்லை?

கேள்வி: கடந்த வாரம், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கொழும்பு வருகைக்குப் பிறகு, இந்திய அரசு தமிழர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது பற்றிய உங்கள் எதிர்வினை என்ன?

கோட்டாபய: நான் வெளியுறவு அமைச்சரிடம் கூறியது போல், எனது அணுகுமுறை என்னவென்றால், தமிழர்களிற்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரங்கள் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன.

ஆனால் வேலைகள் மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

அரசியல் பிரச்சினைகளை நாம் விவாதிக்க முடியும், ஆனால் 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு விஷயத்தை உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு.

ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.

எந்த சிங்களரும் சொல்ல மாட்டார்கள், பகுதியை அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சியின் பின்னர் என்னை நீங்கள் அளவிடுங்கள்.

13 வது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். அது செயற்படுத்தக்கூடியது. ஆனால் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சில பகுதிகளை எங்களால் வழங்க முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

மனித உரிமை மீறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியது போன்ற குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

யுத்தகாலத்தை விட, சமாதான காலங்களில் அதிக ஆர்வமெடுத்து, கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் பணியாற்றினேன்.

மேலும் அனைத்து போராளிகளையும் நிராயுதபாணியாக்கினேன். நான் இல்லாமல் மாகாண சபை தேர்தல்கள் இருந்திருக்காது.

எங்கள் அரசாங்கம் முதன்முறையாக வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் நடத்தியது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் நாங்கள் அவற்றைக் கையாள முயற்சிக்கவில்லை, அல்லது எங்கள் விருப்பப்படி ஒரு வேட்பாளரை அழைத்து வரவில்லை.

சர்வதேச சமூகம் இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை, தமிழ் அரசியல்வாதிகள் கூட இந்த விஷயங்களை அங்கீகரிக்கவில்லை, இது வடக்கு மற்றும் கிழக்கில் சிறந்த சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்றார்.