சஜித் தோல்வியடைந்த பிரதான காரணத்தை வெளியிட்ட சோதிடர்

சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெறுவார் என்று, தேர்தலிற்கு முன்னர் அடித்துச் சொன்ன சோதிடர்கள், அது குறித்து விளக்கமளித்துள்ளனர்.

சஜித்தின் ஜாதகம் குறித்த குழப்பமே படுதோல்விக்கு காரணமென கூறியுள்ளனர்.

சஜித்தின் ராசியை தாம் தவறாக புரிந்து கொண்டு, கணித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் முன்னதாக இலங்கையின் முன்னணி சோதிடர் சரத் சந்திர உள்ளிட்ட ஒரு குழுவினர், ஊடக சந்திப்பை நடத்தி சஜித் வெற்றியீட்டுவார் என அடித்துச் சொல்லியிருந்தனர்.

இது குறித்து சரத் சந்திரவை தற்போது ஊடகங்கள் வினவியபோது…

சஜித்தின் லக்னம் விருச்சிகம் என்ற எண்ணத்தில் தான் இருந்ததாக குறிப்பிட்டார். அந்த குழப்பமே அனைத்திற்கும் காரணமென தெரிவித்தார்.

சஜித்திற்கு ஒன்பது கிரகங்களின் அனுக்கிரகமும் இருக்கிறது என தமிழ் சினிமா நகைச்சுவை பாணியில் முன்னர் கணித்திருந்தனர்.

அவருக்கு ராஜ யோகம் இருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

“அவரது லக்னத்தைச் சுற்றி குழப்பம் இருந்தது. வேறு சில ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தைப் பார்த்தபின் மிதுனம் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு அவருக்காக கணிப்புகளைச் செய்தார்கள் என்பதையும் நான் அறிந்தேன்.

அவரது லக்னம் மிதுனம் என்றால் அவர் ஒருபோதும் வென்றிருக்க முடியாது என்றார்.

சஜித்தின் ராசி அடையாளம் விருச்சிகமா அல்லது மிதுனமா என்று தெரியவில்லை என்பதுதான் பிரச்சினை என்று கூறினார்.

அத்தகைய சூழ்நிலையில், சோதிடர்கள் எப்போதும் துல்லியமான கணிப்புகளைச் செய்ய சிரமமானது என்றார்.

விருச்சிகம், மிதுனத்திற்கு சென்ற ஒரு கட்டத்தில் சஜித் பிறந்ததே குழப்பத்திற்கு காரணம் என்றார்.

25 ஆண்டுகளாக சோதிடராக இருந்ததாகவும், 2018 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நெருக்கடியால் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தை சரியாக கணித்ததாகவும் சரத்சந்திர கூறினார்.

“அது தோல்வியடையும் என்றும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வருவார் என்றும் நான் சரியாக கணித்தேன். பலர் இப்போது எங்களை குற்றம் சாட்டுகிறார்கள்.

எங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களால் அப்படி ஆகிவிட்டது. நாங்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டோம்”என்று அவர் கூறினார்.

பத்தரமுல்லை, குருநாகல், கம்பஹா, காலி மற்றும் இரத்னபுரியில் சரத் சந்திரவின் அலுவலகங்கள் உள்ளன. தேர்தலைத் தொடர்ந்து தனக்கு தொலைபேசி வழியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

“நான் அங்கு சென்றால் எனக்கு ஆபத்து வருமென சிலர் அச்சுறுத்தியுள்ளதால், குருநாகல், இரத்னபுரி மற்றும் காலியில் உள்ள எனது அலுவலகங்களுக்கு செல்வதை நான் நிறுத்திவிட்டேன்” என்று கூறினார்.

அதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட கோட்டாபயவின் ஜாதக தகவல்களும் தவறானவை என்றார். கோட்டாவின் ஜாதகத்தில் வலுவான ராஜயோகம் இருப்பது இப்போது தெளிவாகிறது. ஆனால் முன்னர் வழங்கப்பட்ட தகவல்களில் அது இல்லை என்றார்.

தமது ஜோதிட முடிவுகளை கிண்டல் செய்பவர்களிற்கும் அவர் பதிலளித்துள்ளார். “2015ம் ஆண்டு தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெறுவார் என்று நான் சொன்னேன்.

போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் ஸ்ரீ.ல.சு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் மைத்ரிபால சிறிசேன கட்சியிலிருந்து விலகி அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிட்டார். அவர் ஜனாதிபதியானவுடன் ஸ்ரீ.ல.சு.க.வின் தலைவரானார்.

எனவே எனது கணிப்பு சரியாக இருந்தது. தவறான தகவல்களால் இந்த நேரத்தில் நாங்கள் தவறு செய்தோம்.” என்றார்.

சஜித்தின் வெற்றியை ஆரூடம் கூறிய இன்னொரு சோதிடரான கல்யாணி மெனிகே, தானும் சஜித்தின் லக்னத்தை விருச்சிகம் என்ற அடிப்படையில் கணித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

லக்னம் மிதுனமாக இருந்திருந்தால், மிதுனத்திற்கு நல்ல காலம் 2022 க்குப் பிறகுதான் வரும் என்று அவர் ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார் என்று அவர் கூறினார். சஜித் பிரேமதாசவின் பக்கத்தில் “வசனா குணா” (நல்ல அதிர்ஷ்டம்) இல்லையென்றார்.