ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் முடிவுகளுக்கும், விடுதலைப் புலிகளின் ஈழநாட்டுப் புகைப்படத்திற்கும் தொடர்பு!

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் புகைப்படத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டுப் புகைப்படத்திற்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில் ஒரு நேர்கோடு காணப்பட்டது. அந்தக் கோட்டினை மூடிமறைக்க முடியாது. ஈழநாட்டு வரைப்படத்தை பார்த்தால் அது புரியும். அதனை மூடிமறைத்துப் பேசினால் நாங்கள் பொய்கூறுவதாகிவிடும்.

அவ்வாறு மூடிமறைத்துப் பேசுவதற்கும் எண்ணமில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாம் தமிழ் மக்களிடம் இருந்தும் வாக்குகளை எதிர்பார்த்த போதிலும், எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறவில்லை என்றாலும், தாம் நாட்டின் ஜனாதிபதி என்பதை தனது பதவியேற்பு நிகழ்வில் அநுராதபுரத்தில் வைத்து கூறியிருந்தார்.

அதனால் அதற்கான பதில் அந்த உரையில் காணப்படுகின்றது. அதனை மேலும் விஸ்தரிப்பு செய்தால், சிங்களத் தவைவர் ஒருவருக்கே வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்ததை நான் அவதானித்திருந்தேன்.

எனினும் அந்தப் பேச்சில் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனக் கூட்டமைப்பினுள் பெரும்பான்மையின மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே நான் அவதானிக்கின்றேன். அதற்கு காரணமும் உள்ளது.

சில இனவாத அரசியல் தலைவர்கள், சில சந்தர்ப்பங்களில் சவால்களை விடுத்தனர். அதாவது, முடியுமானால் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலை வென்றுகாட்டுமாறு சவால்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த சவால்களை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதாகவே நான் அறிகிறேன். அந்த பிழையான சிந்தனை கொண்டவர்களை ஓரிணைத்து, இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பரங்கியர் உள்ளிட்ட அனைவரையும் இணைக்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே அவசியமாகும்” என அவர் கூறியுள்ளார்.