இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்!

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி தெரிவித்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அக்கடிதத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளதுடன், இன்று காலையில் எனக்கு 6 வயது சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் கிடைத்தது.

இக்கடிதம் எனக்கு வெகுவாக உத்வேகம் தந்ததுடன் ஊக்கமளித்தது. இளம் தலைமுறையினர் மீதான பொறுப்புகளை நினைவுபடுத்தும் விதமாகவும் இது இருந்தது.

ஒரு நாள் நிச்சயம் அச்சிறுவனை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேம். உனக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

சிறுவனின் கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,

நான் அப்துல்லா, லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன். நான் பாதி பிரிட்டிஷ்காரன், மீதி இலங்கைகாரன் – என்னுடைய இதயம் 100% இலங்கையின் மீது காதல் கொண்டுள்ளது.

உங்கள் தேர்தல் வெற்றி குறித்து எனது தாயார் கூறியிருந்தார், உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும்.

உங்களால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? நம் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது.

இலங்கையில் எழில்மிகு கடல் மற்றும் கடற்கரைகளை பாதுகாக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அப்போது தான் அங்கு ஆண்டுக்கொரு முறை வருகை புரியும் ஆமைகளும் பாதுகாப்பாக இருக்கும், என்னை போல..

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அன்புடன் அப்துல்லா அபுபைத்.

சமூக சிந்தனையுடனும், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு 6 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம், சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டுமென்ற உத்வேகத்தை இளைஞர்களுக்கும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.