வடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. தமது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு ஏனைய 8 மாகாணங்களுக்கும் நியமித்த ஜனாதிபதி, வடக்கு மாகாண ஆளுநராக தமிழ் ஒருவரை நியமிப்பதில் நீண்ட இழுபறியில் உள்ளார்.

முத்தையா முரளிதரனை நியமிப்பதில் ஜனாதிபதி உறுதியாகவிருந்தார். எனினும் முரளிதரன் ஆளுநர் பதவியை அடியோடு மறுத்துவிட்டார்.

அதனால் தனது வெற்றிக்கு பங்காற்றிய கலாநிதி ரிஷி செந்தில்ராஜை நியமிக்க திட்டமிட்டார். அவரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மறுத்துவிட்டார்.

இறுதியில் மூத்த பத்திரிகையாளர்கள் என்.வித்தியாதரன், கே.ரி.ராஜசிங்கம் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

அத்துடன், கலாநிதி சுரேன் ராகவனை நியமிக்க ஜனாதிபதியுடன் ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்கிறது.

இதில் என்.வித்தியாதரன் மகிந்த ராஜபக்சவின் தரப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிய முடிகிறது.

இந்த நிலையில் அமைச்சரவையில் இன்று இந்தக் கருத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.