கூட்டமைப்பு உடைந்தது உறுதியானது! ஆயுதக் குழுக்கள் வெளியேற்றம்? அமைச்சர்களாகும் தமிழரசு?

இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் – யுத்தத்தின் பின்னர்- ஏகபோக தலைமைத்துவமாக உருவெடுத்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி, கூட்டணி தர்மங்களை துளியும் கணக்கெடுக்காமல் ஏகபோகமாக செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள இறுதி கட்சிகளும் வெளியேறும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கான சில சுற்று பேச்சுக்கள் இந்த இரண்டு கட்சிகளிற்குமிடையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட ரெலோ பிரமுகர் ஒருவரும் பேச்சு நடப்பதை உறுதி செய்தார்.

கடந்த ஆட்சியில் ரணில் தரப்புடன் இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திய தமிழ் அரசு கட்சி, அதற்கான சில வரப்பிரசாதங்களை பெற்றிருந்தது.

அது தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்களிற்கு மாத்திரமானது (சுமந்தரன் – மாவை சோனாதிராஜா – சம்பந்தன்).

அரசியல்தீர்வு உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விவகாரங்களில் கூட்டமைப்பாக நெருக்கடியை சந்தித்திருந்த வேளையில், தனிப்பட்ட வரப்பிரசாங்களுடன் தமிழ் அரசுகட்சி தலைவர்கள் திருப்தியடைந்து விட்டனர் என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், திரைமறைவிலான இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், கோட்டா அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்கும் திரைமறைவு முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இதற்கு சாதகமான அப்பிராயத்தை உருவாக்க, புதிதாக அரசியலுக்கு ஈர்க்கப்படும் இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் பேசி வருவதுடன் அதற்கான ஆயத்தத்தத்தை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழ் அரசு கட்சியின் ஏகபோகம், தன்னிச்சை, பிழையான அரசியல் முடிவுகளின் எதிரொலியாக, அந்த கட்சியுடனான கூட்டணியை முறிக்க ரெலோ, புளொட் கட்சிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

இரண்டு கட்சிகளிலுமுள்ள உயர்மட்ட தலைவர்கள் மத்திரம் தொடர்புபட்ட இந்த பேச்சுக்களில் சில சுற்றுக்கள் முடிவடைந்துள்ளன.

இதேவேளை, இதன் அடுத்த கட்டமாக புதிய கூட்டணி உருவாக்கும் பேச்சுக்களும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிவற்றுடன் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்கும் முதற்கட்ட பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பின் முக்கிய தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதையும் தமிழ்பக்கம் அறிந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியிருந்தது.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறின.

இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு கட்சிகளும் வெளியேறும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் இலங்கை தமிழ் அரசு கட்சி கையெழுத்திட்டிருக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன அதில் கையெழுத்திட்டன. இந்த கட்சிகள் இப்பொழுது மீண்டும் கூட்டணி வைக்கும் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரையே பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.