கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு! செல்ல விரும்புவோருக்கு 1000$ கட்டணம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர்கள் சாதாரண பயணிகள் முனையத்திற்கு பதிலாக , விஐபி முனையத்தைப் பயன்படுத்தினால் 1000 அமெரிக்க டொலர் செலுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி நாட்டில் அரசியல் மற்றும் கலாசாரத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு ஊழியர்கள் 250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதியுடன் பயணிக்கும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயு, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வோர் சிறப்பு விருந்தினருக்கான வாயில் ஊடாக செல்ல விசேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் இந்த வாயிலை பயன்படுத்தி வந்தனர். எனினும் தற்போது இந்த பாதையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் சாதாரண பயணிகள் வாயில் சென்று வர வேண்டும். சிறப்பு விருந்தினர் வாயிலாக செல்ல விரும்புவோர் 1000 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து வரும் ராஜதந்திரிகள் மற்றும் பிரபலங்கள் கட்டணம் இன்றி சிறப்பு விருந்தினர் வாயில் ஊடாக வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக சென்றிருந்தார். அதனையடுத்து அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் அவ்வாறு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.