யாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிக்கு இந்திய அரசு மேலும் 300 மில்லியன் ரூபா நிதியுதவியளிக்கவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங்குடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த நிதியுதவியில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் பயணிகள் முனையம் விரிவுபடுத்தப்பட்டு லக்கேஜ் பெல்ட் கட்டப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய அரசாங்கம் அவசரமாக அதை நிர்மாணிக்கத் தொடங்கியதால், விமான நிலையம் சரியாக இயங்க முடியாமலிருப்பதாவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் பொதுவான விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தரையிறங்கும் கருவிகள் இல்லை என இந்திய உயர் ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து விமான நிலைய அபிவிருத்திப் பணிகளிற்கு நிதியளிக்க தூதர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு வரி விலக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.