வடக்கு, கிழக்கில் இனி தமிழிற்கே முதலிடம்!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமையளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதற்கான உத்தரவை விடுத்துள்ளார்.

அதன்படி, பெயர்ப்பலகைகளில் இனி தமிழில் எழுதப்பட்ட வாசகமே முதலில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சியின் அரசகரும மொழிகள் ஆணைக்குழு விடுத்த பரிந்துரையின் அடிப்படையிலான நடவடிக்கை இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செப்ரெம்பர் 6ம் திகதி அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிற்கு இதற்கான பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் நகல் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் இந்த புதிய உத்தரவு இடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் வடக்கு, கிழக்கில் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழே, பெயர்ப்பலகைகளில் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.