தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்

காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன.

நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் கடந்த 28ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதை அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.

காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை, நிலையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளி்ட்ட விடயங்களுக்கு முக்கியமானதொரு நகர்வு என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கூறியிருந்தார்.

அதேவேளை, காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், இது விரைவில் முழுமையாகச் செயற்பட வேண்டும் என்றும், எல்லா சமூகங்களுக்கும் காத்திரமான உதவிகளை வழங்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணியகத்துக்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல செய்தி என்று கூறியுள்ள சிறிலங்காவுக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டூர்னேவாட், அவர்கள் உடனடியாகத் தமது பணிகளை ஆரம்பிப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினொன் இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில், “ நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தாலும், இது வரவேற்கத்தக்கது. அமைதியான, நல்லிணக்கத்துடன் கூடிய செழிப்பான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப இன்னும் அதிகம் செய்வதற்கான கடப்பாட்டை சிறிலங்கா கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில்ஒரு பங்காளராக கனடாவும் இணைந்திருக்கிறது. ஆனால் உண்மையான முன்னேற்றம் இலங்கையர்களால் தான் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.