யாழ். விமான நிலையம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

பயணிகள் முனையத்துக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது..

பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை முன்னைய அரசாங்கம் அவசரமாக திறந்த போதும், அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை.

அங்கு விமானங்களுக்கு வழிகாட்டும், கட்டுப்படுத்தும், தரையிறங்கும் கருவிகள் கூட இல்லை. எனவே, பிராந்திய விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.

இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து விடுத்த வேண்டுகோளின் பேரில், நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.