விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட அபாய அறிவிப்பு

வடக்கு- கிழக்கில் தேசிய பாடசாலைகள் அமைக்கும் விடயத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் சகல வசதிகளையும் கொண்ட 3 பாடசாலைகளை அபிவிருத்தி செய்து, அந்தப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதன் மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 வரையில் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் மும்மொழி கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் அனைத்து வசதிகளையு।ம் கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கும் அடுத்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறான 20 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் மாகாணங்களின் அதிகாரங்களுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் தேசிய பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சில பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டன. வடக்கிலும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு நான் நடவடிக்கையினை எடுத்தபோது பெரும்பான்மையான புத்திஜீவிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பெறும் முயற்சியாக இது அமையும் என்றும் அவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தொகுதிக்கு ஒரு பாடசாலையை தெரிவு செய்து அதற்கான வளத்தினைப் பெருக்கி அதனை தேசிய பாடசாலையாக ஆக்க முயற்சி எடுத்திருந்தோம். ஆனாலும் புத்தி ஜீவிகளின் ஆலோசனை காரணமாக அந்த செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தோம்.

தற்போது இடைக்கால அரசாங்கமானது, பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் 3 பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரையில் இத்தகைய செயற்பாடு மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் பறிப்பதாகவே அமையும். எனவே தொகுதிக்கு ஒரு பாடசாலையை தெரிவு செய்து அவற்றின் வளங்களைப் பெருக்கி தேசிய பாடசாலையாக மாற்றவது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் முழுமையாக பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டால் அது மாகாணங்களுக்கான அதிகாரத்தை பறிப்பதாகவே அமையும்.

இல்லாவிடின் வடக்கு- கிழக்கில் மாகாண பாடசாலைகளை, மாகாண சபை அதிகாரத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இவ்வாறு 3 பாடசாலைகளை அபிவிருத்தி செய்தால் அது பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

வடக்கில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தொகுதிக்கு ஒரு பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். உதாரணத்துக்கு வட்டுக்கோட்டை தொகுதி, காங்கேசன்துறை தொகுதி, பருத்தித்துறை தொகுதி, ஊர்காவற்றுறை தொகுதி, கோப்பாய் தொகுதி போன்றவற்றில் தேசிய பாடசாலைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

அத்தகைய இடங்களில் பாடசாலை ஒன்றைத் தெரிவு செய்து வளங்களைப் பெருக்கி அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும். அதுவும் அப்பகுதி புத்திஜீவிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடியே முடிவுகள எடுக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெரும்பான்மையான பாடசாலைகள் வளங்களற்ற பாடசாலைகளாகவே உள்ளன. காணி வசதி, உள்ளக வசதிகள் என்பன அந்தப் பாடசாலைகளில் இல்லை. எனவே இவ்வாறான பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக பெயரளவில் மட்டும் மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் 3 பாடசாலைகளை தெரிவுசெய்து அனைத்தையும் தேசிய பாடசாலைகளாக மாற்றும் செயற்பாடு என்பது அதிகாரத்தை மத்தியில் குவிப்பதற்கான நடவடிக்கையாக அமைந்துவிடும்.

இதேபோன்று மும்மொழிப் பாடசாலைகளை அமைக்கும் விடயத்திலும் வடக்கு கிழக்கு தொடர்பாக விசேட ஆலோசனை நடத்தப்பட வேண்டும். புதிய கல்வி அமைச்சர் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.