ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

புதுடெல்லியில் நேற்று முன்தினம் இந்திய கடற்படையின் ஏற்பாட்டில், நடந்த இந்தோ-பசுபிக் பிராந்திய கலந்துரையாடலில், உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”கொழும்புத் துறைமுகத்துக்கு சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களின் வருகை அதிகளவில் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டில் 14 நாடுகளின் 65 போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்தன.

இதில் பெருமளவு இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினுடையவை தான். இந்தியாவின் 22 போர்க்கப்பல்கள் கடந்த ஆண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன” என்றும் அவர் கூறியுள்ளார்.