இலங்கை பௌத்த மதத்தினரின் சுற்றுலாத் தளங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு சிங்களத்தில் பெயர்ப் பலகைகள் மற்றும் அறிவுப்புப் பலகைகளை வைப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் சாஞ்சி பௌத்த விகாரைக்கு சென்ற அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இப்பிரதேசத்துக்கு அதிகமாக வரும் சிங்கள பௌத்த சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி அந்த இடங்களில் சிங்களத்தில் அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக இந்தியாவின் தொல்பொருளியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் மிக பழமைவாய்ந்த பெளத்த விகாரைகளின் பெயர் பலகைகள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றுக்கு சிங்கள மொழியையும் உபயோகிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தீர்மானத்தை அடுத்து கௌதம புத்தரின் பிறப்பிடமான புத்தகயா, குஷினாரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களிலும் சிங்கள மொழியில் பெயர் பலகைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதிகளுக்கு அதிகளவான சிங்கள பௌத்த மக்கள் சுற்றுலா செல்கின்றார்கள். இந்நிலையில் குறித்த இடங்களுக்கு சிங்கள மொழியைக் கொண்டு அறிவுப்புப் பலகைகள் மற்றும் முக்கிய இடங்களுக்கான வழிகாட்டுதல் பலகைகளையும் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஞ்சி பௌத்த விகாரையில் வருடாந்தம் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இந்திய மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், சிங்கள மொழி பெயர் பலகைகளை திறந்து வைத்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “ இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நல்லுறவை தொடர்ந்தும் நிலை நாட்ட சிறந்த சந்தர்ப்பமாக இது அமையும்” என்றார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள சாஞ்சி பௌத்த விகாரையின் விகாராதிபதி பானகல உபதிஸ்ஸ தேரர்,
“ அண்மையில் சாஞ்சி பௌத்த விகாரைக்கு வந்த அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இப்பிரதேசத்துக்கு அதிகமாக வரும் சிங்கள பௌத்த சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த நடவடிக்கையை முன்னெடுத்தார்” என்றார்.
இதுவரை காலமும் அப்பகுதிகளில் காணப்பட்ட பெயர் பலகைகள் மற்றும் கல்வெட்டுகள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.