பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியடில்லை. பெரும்பான்மை சமூகங்களின் அடக்குமுறையினாலேயே அதிகாரப்பகிர்வு கோரிக்கை எழுகிறது.
அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று (17) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அதிகார பகிர்வை நிராகரித்தும், பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவின்றி அதை செயற்படுத்த முடியாதென்றும் அண்மைக்காலமாக ஜனாதிபதி தெரிவித்து வரும் கருத்து தொடர்பாக அவர் பதிலளிக்கையில்…
போர் நடந்தபோது, 13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவேன் என்றும், அதற்கும் அப்பாலும் சென்று அதிகார பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவேன் என மஹிந்த ராஜபக்ச 3 முறை இந்தியாவிற்கு எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்து கட்சி குழுவின் இடைக்கால அறிக்கையை எடுத்துச் சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்து இதை முழுமையாக அமுல்படுத்துவேன் என வாக்குறுதி கொடுத்தார்.
13வது திருத்தைத்தையும், அதிகார பரவலாக்கலையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என இந்தியாவிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் வாக்களித்துத்தான், யுத்தத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த, இன்றைய ஜனாதிபதி அமை மறுதளிப்பது ஆச்சரியமாக உள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதரவளிக்காத எதையும் செய்ய முடியாது. அதிகார பகிர்வு என்பது பெரும்பான்மை மக்கள் இணங்கித்தான் செய்ய வேண்டுமென்றல்ல.
அதிகாரபகிர்வு கோரிக்கை எழுவதே பேரினவாதத்தின் காரணத்தினால்தான்.
ஒரு நாட்டில் அரச அதிகாரம் பகிரப்படாமல், ஒரு மையத்தில் இருந்தால் பெரும்பான்மை சமூகத்திற்கு சாதகமாக இருக்கும்.
நிரந்தரமாக பெரும்பான்மையாக ஒரு சமூகம் இரக்கும்போது, ஜனநாயகம் சரியாக அமையாது.
அதனால்தான் அப்படியான நாடுகளில் அதிகாரம் பகிரப்பட வேண்டும். நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பவர்கள், ஓரிரு பிராந்தியங்களில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம்.
ஆகவே எண்ணிக்கையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற அந்த தோற்றப்பாட்டை விலக்கும், முழுமையான ஜனநாயகத்தை அமுல்ப்படுத்தும் ஒரு முறைதான் அதிகார பரவலாக்கம். அதைத்தான் சமஷ்டி எனப்படும்.
அதிகார பரவலாக்களிற்கு பெரும்பான்மையினர் சம்மதிக்கவில்லையென சொல்வதை ஏற்க முடியாது. பெரும்பான்மையினரின் ஆதிக்கதிலிருந்து விடுபடத்தான் சமஷ்டி முறை செயற்படுத்தப்பட வேண்டும்.
இதில் தமிழ் மக்களின் நிலைப்பாடு 70 வருடமாக மாறாமல் இருக்கிறது. அதுதான் முக்கியமானது. எனவே, ஜனாதிபதியின் கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்.
அதிகார பரவலாக்கலின் மூலமே இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முடியுமென நம்புகிறோம். ஜனாதிபதி தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.






