கொத்தணிக் குண்டுகளை தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

கொத்துக்குண்டுகளை (கிளஸ்டர்) தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான அனுமதியைக் கோரும் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையிடம் முன்வைத்திருந்தார்.

இதற்கமைய, கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில், கையெழுத்திட்ட 102 நாடுகளுடன் சிறிலங்காவும் இணைந்து கொள்ளவுள்ளது.

அதேவேளை, போரின் போது சிறிலங்கா படையினர் ஒருபோதும், கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவர்கள் அதனைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.