181, 126 மாணவர்கள் பல்கலை. அனுமதிக்குத் தகுதி – 71 பேரின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு

2019 ஓகஸ்டில் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 71 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2019 ஓகஸ்டில் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் 2 லட்சத்து 81 ஆயிரத்து 786 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 167 பேர் புதிய பாடத் திட்டத்திலும் 94 ஆயிரத்து 619 பேர் பழைய பாடத்திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றினர்.

பெறுபேறுகளின் அடிப்படையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். 64 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.அவர்களில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 637 பேர் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் 67 ஆயிரத்து 489 பேர் பழைய பாடத்திட்டத்திலும் தோற்றியிருந்தனர்.

அத்துடன், பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தில் தோற்றிய 42 மாணவர்களினதும் பழைய பாடத்திட்டத்தில் தோற்றிய 29 மாணவர்களினதும் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.