பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு!

கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

நேற்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தனிடம்; குறித்த மகஜரை கையளித்துள்ளனர். பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாகவும் கையளிக்கப்பட்ட மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரிய பரந்தன் கிராமத்தில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்றும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னைவள தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே குறித்த மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கான அனுமதியை வழங்காது இருக்க வேண்டும் என மக்கள் சார்பாக பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like