அரசாங்க ஊழியர்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி!

மக்கள் ஆணையின்படி ஜனாதிபதியே நியமிக்கப்பட்டுள்ளார்.மாறாக பிரதமர் மற்றும் இடைக்கால அரசாங்கம் மக்களால் நியமிக்கப்படவில்லை.இவ்வாறு நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தினால் ஒரு வரையறைக்குட்பட்டே செயற்பட முடியும்.

எனவே மக்கள் ஆணையின்றி அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அராங்கத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை தற்போது அதிகரிக்க முடியாது.

இவ்வாறு தகவல் மற்றும் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றம் ஆகியவற்றுக்கு தேவையான அடிப்படை விடயங்கள் குறித்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆட்சிமாற்றத்திற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு அதிகளவு செல்வாக்கு செலுத்தின. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்படும்.

பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.