தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை முதலாம் காலண்டுக்குள் நிறைவுச் செய்து திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் புதுவருட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஐந்து ஆண்டுகள் பின் தள்ளப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் இதயநாடியான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
முழுமையான பணிகள் நிறைவடையாது தெற்கு அதிவேக பாதையின் ஒரு பகுதியினை திறந்து வைத்துள்ளார்கள். அதில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தெற்கு அதிவேக பாதையின் முழுமையான பகுதியில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை முதலாம் காலண்டுக்குள் திறப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இது மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் இப்பாதையை திறப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். துறைமுகத்தில் 10,000 வரையிலான ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.
எதிர்வரும் காலத்தில் அவர்கள் அனைவரையும் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சந்தித்து பேச எதிர்பார்க்கின்றேன். துறைமுகம் என்பது நாட்டின் இதயநாடி.
விமானநிலையம் மற்றுமொரு இதயநாடி. பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சும் இதுபோன்றே முக்கியமான அமைச்சாகும். இன்று புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் நன்கறிவீர்கள். பதினான்கு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை அளித்து அவரை ஜனாதிபதியாக்கியுள்ளீர்கள்.
இந்நாட்டு மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்தமையால் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து இந்நாட்டுக்கு விளைவித்த நட்டம் உங்களுக்கு நன்கு தெரியும்.
நாட்டுக்கல்ல துறைமுகத்திற்கு நடந்த நட்டம் உங்களுக்கு நன்கு தெரியும். கணக்கில் கொள்ள முடியாதளவு அழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகளாக கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பிக்க அவர்களால் இயலவில்லை. நாம் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை துரிதகதியில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
ரூபாய் 150 ஆக காணப்பட்ட உணவுப் பொதியின் விலையை இருபத்து நான்கு மணித்தியாலங்களிற்குள் ரூபாய் 350 ஆக விலையுயர்த்தியுள்ளார்கள். நாம் அதனை நிறுத்தியுள்ளோம்.
சரியான முடிவுகளை மேற்கொள்ள நான் ஒரு போதும் தயங்குவதில்லை. சரியான முடிவுகளை எடுப்பதற்கே ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றுவோம்.
துறைமுகம் என்பது அபிவிருத்திச் செய்ய கூடிய இடம். நான் தொழிற்சங்கங்கள் பற்றி நன்கறிவேன். நான் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய ஊழியர் சங்கத்தில் பணியாற்றியுள்ளேன்.
என்னுடன் இணைந்து மிகவும் இலகுவாக பணியாற்றலாம். பிரச்சினைகள் தொடர்பில் என்றை அறிவுறுத்துங்கள். பிரச்சினைகள் பின்னால் செல்ல வேண்டாம். இது உங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசியமான தருணமாகும்.
பிரச்சினைகள் காரணமாக நாட்டிற்கு நட்டம் ஏற்படுகின்ற பொருளாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென நான் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கையொன்றை முன்வைக்க விரும்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.






