யாழ்.வடமராட்சியில் இளைஞன் சடலமாக மீட்பு! அடையாளம் காட்டிய பெற்றோர்

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் வயது-26 என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாகத் தேடினர். எனினும் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.