கடன் திட்டங்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!

நுண் நிதிக்கடன் மற்றும் வட்டிக் கடன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண நகரில் இன்று(27) கண்டனப் பேரணி இடம்பெற்றது. யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ். பிராதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு யாழ்.மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்ற அனைத்துக் கடன் திட்டங்களும் நிறுத்தப்படவேண்டும் எனவும் குறைந்த வட்டி வீதத்தில் கடன் திட்டங்களை வழங்குவதே பொருத்தமானதாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன ரீதியாகப் பாகுபாடு பார்த்து முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும எனவும் . வடக்கு மக்களைக் காட்டி உலக நாடுகளிடம் பல நிதி உதவிகளைப் பெறும் அரசு, இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்காது இவ்வாறான கடன் திட்டங்களை வழங்கி வருகிறது எனவும் குற்றம் சுமத்தியுள்ளர்.

பெருமளவான நிதி நிறுவனங்கள், போருக்குப் பின்னர் வடக்குக்கு படையெடுத்து தமிழ் மக்களுக்கு பெரும் மோசடித்தனமான வட்டியை அறவிடும் கடன்களை வழங்கி அவர்களுடைய பொருளாதாரத்தை திட்டமிட்ட வகையில் சுரண்டுகின்றன.

கிராமங்களுக்குச் செல்லும் நிதி நிறுவனங்களின் அலுவலர்கள், எமது மக்களுக்கு கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி, சட்டவிரோதமான ஒப்பந்தங்களைச் செய்து கடன்களை வழங்குகின்றனர். எங்களுடைய மக்களிடம் உள்ள சிறிதளவு இருப்பையும் சுரண்டுகின்ற வகையில்தான் இந்த நிதி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன என போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.