மட்டு முதல்வரின் அதிரடி நடவடிக்கை! இடிக்கப்படும் பிரபல வர்த்தக நிலையம்

மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதி இன்றி முனை பிரதான வீதியில் அமைந்துள்ள meemas துணி கடையின் கட்டிட பகுதிகள் இன்று மட்டு முதல்வரின் உத்தரவுக்கிணங்க அகற்றப்படுகிறது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உற்பட்ட பல கட்டிடங்கள் மாநகர அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துணிக்கடையின் மேல் உள்ள பகுதி மாநகர அனுமதி இன்றி கட்டப்பட்ட நிலையில் மாநகர சபையால் கட்டடத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை அகற்றுமாறு பதிவுத் தபால் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டும் குறித்த கடையின் நிருவாகத்தினர் அதனை செவி சாய்க்கவில்லை.

அதன் பின்னர் குறித்த விடயம் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் இக் கட்டிடத்திற்கான மேல் பகுதிகள் இன்று மாநகர சபையினால் அகற்றப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன் அவர்களின் நிருவாகத்தின் கீழ் பல மக்கள் நலத் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்ற நிலையில், அங்கு சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே இக் கட்டிடத்தின் அனுமதிக்கப்படாத பகுதிகள் இன்று நீதிமன்றின் அனுமதியுடன் அகற்றப்படுகிறது.

அத்துடன் இந்த நடவடிக்கைள் இன்னும் பல அனுமதியற்ற கட்டிடங்களிகளை அகற்றுவதற்கும் பிரயோகிக்கப்படும் எனவும் மாநகர சபை அறியத்தருகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆணையாளர் சித்திரவேல் அவர்கள், கட்டிட நிருவாகத்தினருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இன்று குறித்த கட்டிடம் மாநகர சபையால் அகற்றப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 17-11-2015ஆம் ஆண்டு குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகரசபையின் அனுமதிபெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு அமைய கடந்த 18-02-2019ஆம் ஆண்டு குறித்த கட்டிட பகுதிகளை அகற்றுவதற்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கியபோதும், அந்த கட்டிட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக மேற்கொண்டிருந்தார்.

எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த கட்டிடத்தின் பகுதிகளை அகற்றுமாறு மாநகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்தவாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று குறித்த பகுதியை அகற்றுவதற்கான நடவடிக்கைககள் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் கூறியுள்ளார்.

மேலும் கட்டிடம் அகற்றுவதற்கான மேற்பார்வையினை மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் மாநகர உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.