ஒரு மணிநேரத் தாமதம்! ஈரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்

இரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரைன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அடுத்த நில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த வாரம் இரான் ராணுவ அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம் நடந்த பிறகு தற்போதுவரை இரானில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

தூதரகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுலைமானி இறந்த மறுநாளே இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இரானின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நேற்று சுலைமானியின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. இது நடந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது இரான் தொடர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையே தொடர் தாக்குதல் நடந்துவரும் இதே சூழலில் அங்கு திடீர் விமான விபத்தும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் இன்று காலை 6:12 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8:12) உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) நோக்கிப் புறப்பட்டது போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம்.

இது புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அதாவது விமானநிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் பரந்த் மற்றும் ஷஹ்ரியர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் தரையில் விழுந்து நொறுங்கி அதே இடத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. விமானம் விழுவதற்கு முன்னதாக வானத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான உக்ரைன் விமானம் இன்று காலை 5:15 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும் ஆனால், ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்து நடந்த வீடியோ காட்சியை இரான் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் விமானம் கீழே விழுந்து நொறுங்கும் அனைத்துக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போயிங், உக்ரைன் விமான விபத்து குறித்து நாங்கள் அறிவோம்.

மேலும், சில தகவல்கள் மற்றும் உயிர்ச் சேதம், விபத்துக்கான காரணம் போன்றவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இராக்கில் உள்ள அமெரிக்கப் படை மீது இரான் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணிநேரங்களில் இந்த விமான விபத்து நடந்துள்ளதால் தாக்குதலுக்கும் விபத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவுடனான சண்டை, விபத்து போன்றவற்றால் இரானில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.