தமிழில் தேசிய கீதத்திற்கு தடையா? அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க வேண்டாம் என்கிற அறிவிப்பை அரசாங்கம் ஒருபோதும் பிறப்பிக்கவில்லை என்று மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிராக அரசாங்கம் தடை விதித்துள்ளதாக வெளியாகும் தகவல்களிலும் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலத்திலும், தமிழ் மக்களுக்கு மட்டற்ற வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அவர்களை ஏமாற்றி ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருந்தோரின் முண்டு கொடுப்பிலும், கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்து கொண்டிருந்த நல்லாட்சி என்ற நாடகம் தமிழ் மக்களுக்கு எதையுமே பெற்றுத்தந்துவிடாமல் முடிவிற்கு வந்திருக்கிறது.

இன்று சிங்கள சகோதர மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் உருவான அரசொன்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை என்ற நிலையிலும் ஒட்டு மொத்த இலங்கைத்தீவிற்கு மட்டுமன்றி, தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதியாக இருப்பேன் என தனது பதவியேற்பு நிகழ்வில் உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் வெற்றியில் பங்கெடுங்கள்,. அதை உங்கள் வெற்றியாக்குங்கள் என்று நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் நான் எமது மக்களிடம் கேட்டிருந்தது போல் வெல்லப்போவது கோட்டாபய ராஜபக்ஷவே என்பதை உணர்ந்து தமிழ் மக்களும் இந்த தேர்தல் வெற்றியில் பங்கெடுத்திருந்தால், வியத்தகு மாற்றங்களை நோக்கி தமிழ் மக்கள் வெற்றியுடன் இதுவரை முன்னேறியிருக்கலாம்.

தமது கனவுகளை வென்றெடுக்கும் பாதை நோக்கி தமிழ் மக்கள் இன்று இலகுவாக அடியெடுத்து வைத்திருக்கலாம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் பங்காளிகளாக தமிழ் மக்களும் மாறியிருந்தால் அவரது கொள்கைப்பிரகடனத்திலும் தமிழ் மக்கள் இன்று முழுமையான பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.

பணப்பெட்டிகளுக்கும் தமது ஆடம்பர வாழ்விற்கும் சோரம் போய் தாம் ஆதரிப்பவர்களை மாபெரும் மகாத்மாக்களாக சித்தரித்து மது அரசியல் புலுடாக்களுக்கு ஒத்துவராதவர்களை தமிழர்களின் விரோதிகளாக மக்களிடம் பொய்யுரைத்து தமிழ் தரகு கட்சிகள் கூட்டுச்சேர்ந்து ஆடிய நயவஞ்சக கூத்துக்கு தமிழ் மக்களை பலியாக்கும் முயற்சிகளே இன்று நடந்தேறியிருக்கின்றன.

ஆனாலும் நாம் அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பவதில்லை. தமது அரசியல் சூதாட்டங்களுக்கு தமிழ் மக்களை பணயம் வைக்கும் சுத்த சுயலாப அரசியலுக்கு எதிராக, மது மக்களின் பங்களிப்புடன் நாம் என்றும் உறுதியுடன் செயலாற்றுவோம்!

தேர்தல் முடிவுகள் வெளியான மறுகணத்தில் இருந்தே தமிழ் மக்கள் தாம் விட்ட தவறுகளை எண்ணி எம்முடன் மனம் விட்டு பேசி வருந்த தொடக்கி விட்டார்கள்.

எமது மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் கடந்த காலங்களை போலன்றி நிரந்தரமாகவே நீடிக்கும் என்ற எனது ஆழ்மன ஊகத்தை அனுபவங்கள் எனக்கு புகட்டியிருக்கின்றது.

புதிய அரசுடன் பேசி எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்ல அரசியல் பலத்தை இம்முறை எமது மக்கள் எமக்கு தர மறுத்திருந்தாலும், எதிர் வரும் காலத்தில் தமிழ் மக்கள் தமது ஆணையை எமக்கு வழங்கி தமிழரின் கனவுகளை வெல்லும் அரசியல் பலத்தை காட்டுவார்கள்.

அன்றாட அவலங்களுக்கு தீர்வுமின்றி, அபிவிருத்தியுமின்றி,. அரசியல் தீர்வுமின்றி,. கடந்த ஆட்சியில் அவலப்பட்டு நின்ற எமது மக்கள், இனிவரும் காலங்களில் தமது ஆதரவை யானைக்கு வழங்காமல் நாம் கேட்கும் ஆணைக்கு வழங்குவார்கள் என்பது உறுதி. ஆனாலும்,. அதுவரை நாம் காத்திருக்கப்போவதில்லை.

இன்று எமக்கு கிடைத்திருக்கும் அமைச்சு அதிகாரம் என்பது எமது தேசிய நல்லிணக்க உறவுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மட்டுமே.

தமிழ் மக்களின் ஆதரவு போதிய அளவு தமக்கு கிடைத்திருக்காத போதிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும், எனக்கு வழங்கியிருக்கும் இந்த அமைச்சு அதிகாரம் என்பது தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கும் அங்கீகாரம் என்றே இன்று பலரும் கூறி வருகின்றார்கள்.

அதற்காக தமிழ் மக்களின் சார்பாக ஜனாதிபதியும்> பிரதமர்வும் தமிழ் மக்கள் சார்பாக எனது நன்றியை கூற விரும்புகிறேன்.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கும் ஆணை கிடைக்கும் வரை, எமது தேசிய நல்லிணக்க உறவால் எனக்கு கிடைத்த அமைச்சு அதிகாரத்தை ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்காகவும் நான் சிறந்த முறையில் செயற்படுத்தி காட்டுவேன்.

காணாமல் போனவர்களின் உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் தேட நான் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றது போல், இன்னும் முடிந்தளவு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு கொண்டுவர எண்ணியுள்ளேன்.

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றது என்றவுடன் தமிழ் மக்களுக்கு ஆனந்த கொண்டாட்டம். ஆனாலும், இங்கு சிலருக்கு திண்ணாட்டம்!

தமிழ் மக்களின் அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தரகு தமிழ் கட்சிகளுக்கு பிரச்சினைகள் தீர்வதில் விருப்பமில்லை கடந்த ஆட்சியில் போதிய அரசியல் பலத்துடன் இருந்தும் அந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து நின்றவர்கள்

புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தமக்கு ஆட்சேபனை இல்லை என்றார்கள். இன்று வந்து சாத்தான்கள் வேதம் ஓதுவது போல் ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிங்களும் தமிழும் சமவுரிமை என்ற தமிழரின் கனவுகளை போதிய அரசியல் பலமிருந்தும் சாதித்து காட்டாதவர்கள்,

சிங்கப்பூரை உதாரணம் காட்டி சமவுரிமை குறித்து இந்த சபையில் பேசி அரசியல் சித்து வியாட்டு காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்லவாது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியவர்கள் இன்று அவரிடம் சென்று கூனிக் குறுகி தமக்காகத்தான் தமிழ் மக்களிடம் செல்லவேண்டும் கோரிக்கைவிடுகின்றார்கள்.

மண்குதிரை நம்பி ஆற்றிலிறங்க முடியுமா? 100 பேர் கொண்ட துரியோதனன் துச்சாதனன் கூட்டத்தை விடவும் ஐந்து பேரைக் கொண்ட பாண்டவர் சேனையே உறுதியானதும் இறுதியானதுமான வெற்றிக்குரியது என்பது வரலாறு.

இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை வெல்லவே நான் சமாதான புறாக்களை கையிலேந்தி வந்திருக்கிறேன்.

தமிழ் மக்களின் தேசிய நல்லிணக்க அடையாளமாகவே நான் இந்த ஆட்சியில் அமைச்சு அதிகாரத்தில் பங்கெடுத்து வருகின்றேன்.

தமிழ் மக்களின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் சுயலாப தமிழ் கட்சிகளின் தவறான வழி நடத்தலை எண்ணி தமிழ் மக்களை இந்த அரசு ஒரு போதும் வஞ்சித்து விடாது என்றே நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.