ஈரான் – அமெரிக்காவுக்கு இடையில் நீடிக்கும் போர் பதற்றம்! கோட்டாபயவிற்கு சென்ற அவசர கடிதம்

ஈரான் – அமெரிக்காவுக்கு இடையிலான போர்ச் சூழலுக்கு மத்தியில் எக்ஸா மற்றும் சோபா போன்ற சர்வதேச ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு இன்றைய தினம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சர்வதேச ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் மில்லேனியம் சவால் என்ற எம்.சி.சி ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.

இதனிடையே எக்ஸா, சோபா போன்ற அமெரிக்கப் படையினர், போர்க்காலத்தில் உதவிசெய்யும் விதிமுறைகள் அடங்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக வேண்டும் என்கிற கோரிக்கையை ஜே.வி.பி சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் அவர் இன்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதன்படி, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சர்ச்சை காரணமாக இலங்கையின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

தற்போதும்கூட எக்ஸா, சோபா போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்களின் ஊடாக போர்ச் சூழலில் அமெரிக்கப் படையினருக்கு விமானத்தளம், துறைமுகம் போன்றவற்றின் ஊடாக உதவி வழங்குவதே முக்கியமளிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சோபா உடன்படிக்கையிலிருந்து விலகுவதானது மிகவும் கடினமான காரியமாகும். ஈரானுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் உதவிக்காக இலங்கை அழைக்கப்படலாம் என்ற நிலைக்கு மத்தியில் அவதானமாகவே அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இலங்கையின் இறைமைக்கு சவாலை ஏற்படுத்தும் 1995இல் கைச்சாத்திடப்பட்ட சோபா ஒப்பந்தம், பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த காலத்தில் 2007ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்ட எக்ஸா ஒப்பந்தம் என்பவற்றை இரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை கொண்டுவருமாறும் அதற்கான முழு ஆதரவையும் ஜே.வி.பி வழங்கும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.