ஒன்று சேர்ந்தார்கள் முன்னாள் விடுதலைப் புலிகள்

தமிழ் மக்களின் நன்மை கருதி முன்னாள் போராளிகளின் 4 கட்சிகளும், 3 கட்டமைப்புக்களும் கூட்டாக இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஓன்றில் இன்று மதியம் நடைப்பெற்ற முன்னாள் போராளிகளின் கலந்துரையாடலின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி பல்வேறுபட்ட இடங்களில் இருந்து செயற்பட்டுக் கொண்டிந்த முன்னாள் போராளிகள் ஜனநாயக வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றுபட்டுள்ளார்கள்.

பல்வேறு தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்துப் போராளிகளும் ஒன்றுபட்டு விடுதலைப் புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக ஒன்றுபட்டு செயற்பட முடிவு எடுத்துள்ளோம்.

அந்தவகையில் ஒன்று சேர்ந்திருக்கும் போராளிகள் கட்டமைப்புக்கள் அனைத்தும் எதிர்காலத்தில் தமிழ் மக்களது இனப்பிரச்சனைக்கு சாத்தியமான நிலமைகள் தொடர்பாக ஆராய்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்புக்களில் முன்னாள் போராளிகளை முன்னிலைப்படுத்துவது போன்ற பலவேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுளளது.

முக்கியமாக சில சங்கடமான நிலையில் பயணித்த போராளிகள் அனைவரும் மீளவும் ஒன்றிணைந்து ஜனநாயக வெற்றிக்காக செயல்பட முன்வந்துள்ளமையை ஒரு பெரிய விடயமாக பார்க்கிறேன்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்டும் எதிர்காலத்தில் செயற்படுவது சிறந்தது என கலந்துரையாடியுள்ளோம்.

இன்று ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளும், புலம்பெயர் வாழ் நிதி அணுசரணை செயலணி, தாய் தேசம் தன்னார்வ தொண்டு நிறுவனம், மக்கள் வாழ்வுரிமைப் பேரவை போன்ற அமைப்புக்களும் என நான்கு கட்சிகளும், மூன்று கட்டமைப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டில் உள்ள 4 கட்சிகள் மற்றும் 3 கட்டமைப்புகளிலும் இருந்து இரண்டு பேர் வீதம் தெரிவு செய்து ஒரு தலைமைத்துவ குழு தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் மீண்டும் கூடி எமது கூட்டுக் கட்சிக்கான தலைமைத்துவம் தெரிவு செய்யப்படும்.

அத்துடன், போராளிகள் கட்டமைப்புக்கள் ஒன்றிணைத்து இருப்பது தனிப்பட்ட போராளிகளின் நலன்களை முன்னறுத்தி அல்ல.

இந்தப் போராட்டடத்தில் ஆகுதியாகிய மாவீரர்கள் குடும்பங்கள், போராட்டத்தில் கொலலப்பட்ட இரண்டு இலட்சம் தமிழ் மக்களின் குடும்பங்கள் என வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களின் நன்மை கருதியே இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த ஊடகசந்திப்பில் நான்கு கட்சிகள் மற்றும் மூன்று கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.