பெரியப்பா தொல்.திருமாவளவன் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க சென்ற குழந்தை… பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் தொல்.திருமாவளனை காண வந்த தருணத்தில் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தை சார்ந்தவர் தம்பி கண்ணன் என்கிற கார்வண்ணன். இவரது மனைவி எழிலரசி.

இவர் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளாராக தென்னை மர சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்.

கட்சித்தலைவரிடம் தனது வெற்றியைக் கூற நினைத்த குடும்பம், மதுரையில் இருந்த திருமாவளவனை சந்திக்க தனது இரண்டு பெண் குழந்தைகளில் யாழினியை மட்டும் அழைத்து சென்றுள்ளனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் யாழினி உயிரிழந்த நிலையில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தன்னைக் காண வந்த தருணத்தில் இப்படியொரு துயர சம்பவம் அரங்கேறியதை எண்ணி தொல்.திருமாவளவன் கண்ணீர் சிந்தியுள்ளார். மேலும் அத்தருணத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை தான் கண்ணீர் மல்க சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களை எங்கோ ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவ்வாறு எங்கும் செல்லாமல், நேற்று மதுரைக்கு சென்ற என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக வந்தவழியில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருக்கும்போதுதான் வேதனைமிக்க அந்த விபத்து நேர்ந்துள்ளது.

மண்டையோட்டில் வெளிக்காயம் இல்லை. ஆனால், உள்ளே மூளையில் கடுமையான சேதம். உடனே அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற இயலாத அளவுக்கு நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து சுயநினைவற்ற நிலைக்குப்போய்விட்டது.

பத்து நிமிடங்களில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தந்தையும் குழந்தையும் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அங்கே சென்று பார்த்தேன். கார்வண்ணனின் இடுப்பெலும்பில் பலத்த அடி. இலேசான கீறல் உடைவு. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதல்.

மழலை யாழினியைக் காப்பாற்ற வாய்ப்பில்லையென மருத்துவர்கள் கையைவிரித்து விட்டனர். எனினும் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கவும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டேன்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பின்னர் இராஜாஜி மருத்துவமனையிலும் குழந்தையைக் காப்பாற்றுவதற்குப் போராடியும் இயலாமல் போய்விட்டது.

“பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவா?அந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.

“பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக்குப் ‘பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின.

கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.- தொல்.திருமாவளவன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like