முத்தம் கொடுக்க வந்த நபரின் முகத்தை பதம் பார்த்த விஷப்பாம்பு!

முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடிக்கும் நபரை கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு தீண்டியுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும், இந்திய பாம்பு வகையை சேர்ந்த நல்ல பாம்பு ஒன்று டிசம்பர் 24ம் திகதியன்று கர்நாடகா மாநிலத்தின் பத்ராவதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனை பார்த்து பயந்துபோன குடியிருப்புவாசிகள் உடனடியாக பாம்புப்பிடிக்கும் சோனு என்கிற நபருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மதுபோதையில் அங்கு வந்த சோனு, எளிதாக பிடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும்கூட, வித்தைக்காட்டும் நோக்கில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த விஷப்பாம்பு திடீரென சோனுவின் உதட்டை கடித்துவிட்டு தப்ப முயன்றது. உடனே சோனு விரைந்து அந்த பாம்பை பிடித்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வாயில் இருந்து இரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. பின்னர் சோனு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் அவருடைய உயிரை காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான வலியுடன், முகம் வீங்கியபடியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனு சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார்.