பரபரப்படையும் ஈரான்! மற்றுமொரு முக்கிய தளபதி ஈராக்கில் சுட்டுக்கொலை

ஈராக்கில் மற்றுமொரு முக்கிய ஈரான் சார்பு போராளி அமைப்பின் தளபதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில் நேற்று இரவு ஈரான் ஆதரவு போராட்டக் குழுவான பி.எம்.எஃப் (Popular Mobilization Forces (PMF) leader Taleb Abbas Ali al-Saedi) இன் தளபதி அப்பாஸ் அலி அல் சைதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் அல்-சைதி படுகொலை செய்யப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய கூடுதல் விபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

ஈரான் ஆதரவுடைய PMF குழுவில் உள்ள ஒரு பிரிவான கர்பலா படைப்பிரிவின் தளபதியாக அல்-சைதி இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.

இந்நிலையில் காசிம் சோலெய்மனியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணைத் தாக்குதலில் குறைவான சேதங்களே ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த சூழலில் ஈராக்கில் மேலும் ஒரு தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like