மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ்சை காணவில்லை! கதறி அழும் அம்மாவும் அப்பாவும்

கல்வி பொது தராதரத்தை நுவரெலியா/ஹோல்புரூக் தமிழ் வித்தியாலயத்தில் கற்ற சி . மோகன்ராஜ் உயர்தரத்தினை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார்.

உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான அவரை காணவில்லை என கடந்த வௌ்ளிக்கிழமை முதல் பெற்றோர் தங்களது உயிரை பணயம் வைத்து தேடி வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பிறந்த சின்னதம்பி மோகன்ராஜ் என்ற பல்கலைக்கழக மாணவன் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி தினத்தில் கோயில் செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவ்வாறே கடந்த 10 ஆம் திகதியும் மோன்ராஜ் கோயிலுக்கு சென்றுள்ளார். காலையில் சென்ற மாணவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவரின் நண்பர்கள் மோகன்ராஜ் இன் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அவருக்கு வேறு இலக்கம் ஏதும் உண்டா என வினவியுள்ளனர்.

பெற்றோர் ஏன் என்று கேட்ட பொழுதும் மாணவர்கள் எதுவும் கூறாமல் தொலைபேசி அழைப்பினை துண்டித்து விட்டனர்.

அதன்பின்னர் பெற்றோர் மோகன்ராஜ் இன் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த மாணவரின் தொலைபேசி இயங்காத நிலையில் பெற்றோர் ஆகரப்பத்தனை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் கடந்த வௌ்ளிக்கிழமை 10 ஆம் திகதியிலிருந்து மோகன்ராஜ் என்ற பல்கலைக்கழ மாணவர் தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கல்விகற்று வந்துள்ள அவர், அரசடியுள்ள மாணவர்கள் தங்குமிட விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி முற்பகல் கோயிலுக்கு செல்வதாக தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்து விட்டு கோயிலுக்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் இதுவரையில் அவரின் நிலை தொடர்பில் அறியமுடியவில்லை.

மோகன்ராஜ் என்ற காணாமல் போன மாணவரின் சகோதரியான புவனலோஜினி தெரிவிக்கையில்

குறித்த மாணவரின் கையடக்க தொலைபேசிக்கு இறுதியாக மன்னார் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார் என காவல் துறையினரின் விசாரணைகளின் மூலம் அறியகிடைத்துள்ளதாக மாணவரின் சகோதரி புவனலோஜினி தெரிவித்தார்.

அதுடன் கடந்த 4 ஆம் திகதி வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அவர் எவ்வித பாதிப்பும் இன்றி நல்ல தேக அரோக்கியத்துடன் காணப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த 09 ஆம் திகதி இரவு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அனைவரிடமும் உரையாடினார். தைப்பொங்களுக்கு தன்னால் வீட்டிற்கு வரமுடியாது.

பரீட்சை அண்மித்துள்ளதால் அதிகம் படிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையினை கொண்டாடி தனக்கு காணொளியினை அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார்.

பின்னர் அம்மா அப்பாவுடன் உரையாடிய பின்னர் மறுநாள் கதைப்பதாக தெரிவித்துவிட்டு தொலைபேசி அழைப்பினை துண்டித்தார்.

மறுதினம் அழைப்பு வரவில்லை. அவர்களின் நண்பர்களே அழைப்பினை ஏற்படுத்தினார்கள். தம்பிக்கு வேறு இலக்கம் இருக்கின்றதா என கேட்டார்கள்.

அதன் பின்னர் தம்பியுடன் எந்தவித தொடர்புகளும் இல்லை.

அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மூச்சு திணறள் காணப்படுவதாகவும் பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் பல்கலை நிர்வாகம் கோரியிருந்தது.

அதற்கிணங்க அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் செய்தததன் பின்னர் சான்றிதழும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாக சகோதரன் தெரிவித்தார்.

ஆனால் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டமை வீட்டில் எவருக்கும் தெரியாது.