வன்னியில் தேடப்படும் புதையல்கள்!! தலைமறைவாகிவிட்டுள்ள முக்கியஸ்தர்?

வன்னியில் புதையில் தேடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவதான செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.

புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவது, நீதி மன்றில் நிறுத்தப்படுவது, புதைக்கப்பட்டுள்ள புதையல்களை கண்டுபிடிக்கப்படுவதற்கான ஸ்கானர் இயந்திரங்கள் கைப்பற்றப்படுவது என்று பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

எப்படியான புதையல்கள் வன்னியில் இருக்கின்றன? அதுவும் பல குழுக்கள், நுற்றுக்கணக்கான நபர்கள் தேடித்திரியும் அளவிற்கு அப்படி என்னதான் புதையுண்டு இருக்கின்றன வன்னியில்?

வன்னி நிலம் என்பது மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 7,650 சதுர கி.மீற்றர் பெருநிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம்.

இந்த பெருநிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன.

80களின் ஆரம்பத்தில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுத தளபாடங்களை கவனமாக மறைத்துவைக்கும் ஒரு நிலமாக வன்னியையே பயன்படுத்தி வந்துள்ளார்கள். அடர்ந்த காடுகள், வயல்நிலங்கள், கடல் சார்ந்த பகுதிகள் என்று காணப்படுகின்ற வன்னி நிலப்பரப்பில் ஆயுதங்களை மாத்திரமல்லாது, பெருமளவிலான தங்கம், பணம் என்று பெறுமதியான பொருட்களும், பாதுகாப்பான முறையில் விடுதலைப் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

ஒரு முழுமையான அரசையே வன்னியில் நடாத்திவந்த விடுதலைப் புலிகள், தனியான ஒரு நாட்டை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள், அந்த நாட்டுக்கும், ஆட்சிக்கும் தேவையான அனைத்து வளங்களையும் கவனமாகச் சேமித்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது.

அந்த சேமிப்பைத் தேடிய பயணங்கள்தான் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கைகள்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால், அந்த புதையல் தோண்டும் பணிகளை மேற்கொண்ட தரப்புக்கள் அல்லது நபர்கள் யார் என்பதுதான்.

சிறிலங்கா ராணுவத் தரப்பு இந்த நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக மேற்கொண்டு வந்தது. தற்பொழுது ஈடுபட்டு வருகின்றது.

அதேவேளை, இந்த விடயம் தெரிந்த சில இராணுவ அதிகாரிகள், இளைப்பாறிய இராணுவ வீரர்கள், சில அரசியல்வாதிகள் போன்றோரும் இந்த புதையல் தேடும் நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அல்லது அவர்களில் சிலரை நேரடியாகக் களத்தில் இறக்கி இந்தப் புதையல் தேடும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதுபோன்ற புதையல் தேடும் நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவி செய்துவந்த, வினோத் என்று அழைக்கப்படும் அன்மினோசன் என்ற இளைஞன் தலைமறைவானதைத் தொடர்ந்துதான், இந்த நடவடிக்கைகள் பற்றிய பரபரப்பு தற்பொழுது மீண்டும் உருவாகியுள்ளது.

தேடப்பட்டுவரும் அந்த இளைஞனுக்கு பல உண்மைகள் தெரியும் என்று கூறப்படுகின்றது.

புதையல் தோண்டும் நடவடிக்கைகளில், ஒரு முக்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ள விடயமும் அதற்கான ஆதாரமும் அந்த இளைஞனுக்கு தெரியும்.

அதேபோன்று, எந்நெந்த தரப்புக்கள் இந்த புதையல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் என்ற தகவல்களும், இதுவரை எப்படியான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கணக்கும், அந்த இளைஞனுக்கு மாத்திரமே தெரியும் என்று கூறப்படுகின்றது.

மிக முக்கியமாக, எஞ்சியுள்ள புதையல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விபரமும் அந்த இளைஞனுக்கு தெரியும் என்று நம்பப்படுகின்றது.

இப்படிப்பட்ட புதைல் வேட்டை தொடர்பான மிக முக்கியமான விபரங்களுடன் தற்பொழுது தலைமறைவாகிவிட்டுள்ள அந்த இளைஞனை தேடி சிறிலங்கா காவல்துறையின் பல குழுக்கள் வலை விரித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலத்தின் கீழ் கண்டெடுக்கப்படும் அத்தனையுமே அரசுக்குச் சொந்தமானவை. கடந்த ஆட்சிக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல்கள் அரசுடமையாக்கப்படவேண்டும் என்ற கோணத்திலும், கடந்த ஆட்சிக்காலத்தில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் அவர்களுடைய வலையமைப்புக்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுத்து வருகின்றது சிறிலங்காவில் காவல்துறை.

அதற்கு உதவும் முகமாக புதையல் தேடும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படும் அன்மினோசன் என்ற தமிழ் இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையிலும் சிறிலங்காவின் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது.

இந்த இடத்தில் மற்றொழு முக்கிய கேள்வி எழும்புவதும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

தலைமறைவாகிவிட்டுள்ள அந்த இளைஞன் தேடப்படுவது அவனது வாயைத் திறப்பதற்கா அல்லது அவனது வாயை நிரந்தரமாக அடைப்பதற்காகவா?