பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது.

வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வருவதற்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

எனினும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் சிபாரிசில் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் நடைபெற்ற முதலாவது அதி உயர் அரச நியமனம் இது ஆகும்.

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிகாரம் இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் என்பதுடன் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் எனவும் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதை விட ஜனாதிபதி கோட்டாபய மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில், கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.

அதுவும் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் ஒருவரது சிபாரிசில் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கமாட்டார் என பொது ஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எது எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலவரப்படி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் பிள்ளையானிடம் இருந்து கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அனுப்பப்பட்ட தகவலின் படி கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.