கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 9 ம் திகதி வெளியேறிய மாணவன் விடுதிக்கு திரும்பவில்லை என்று சகமாணவர்கள் பொலிஸாருக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.

இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவமானது சந்தேகங்களற்ற தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாவது:

குறித்த மாணவனுக்கும் சிரேஷ்ட மாணவி ஒருவருக்குமிடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. இத்தொடர்பின் நிமிர்த்தம் யோகராஜன் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுத்திக்கு சென்றுள்ளார்.

இவர் இவ்வாறு தொடர்ந்து சென்று வந்துள்ளாரா என்பது தொடர்பான தெளிவான தகவல் இல்லாவிட்டாலும், சம்பவதினம் மாணவன் , மாணவியின் அறையினுள் உள்நுழைவதை அவதானித்த மாணவர்கள் பதட்டமடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அவர், நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து தான் இருமாதங்களுக்கு வரமாட்டேன் என்றும் பெற்றோருடன் இருக்கப்போகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தெரிவித்துவிட்டு நேரே சென்ற அவர் கல்லடிப்பாலத்திலிருந்து குதித்துள்ளார். ஒருவர் குதிப்பதை அவதானித்த மக்கள் அது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து கடற்படையினர் தேடுதல் நடாத்தியபோதும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளது.

அதேநேரத்தில் சகமாணவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சீசீ ரிவி கமராக்களை பொலிஸார் பரிசோதித்ததில் இளைஞன் தனியாக பயணித்தது உறுதியாகியுள்ளது.

அத்துடன் அவர் இரவு 8 மணிக்கு இறுதி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் தரவுகள் கூறுகின்றது.

இதேநேரம் சம்பந்தப்பட்ட மாணவி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவருவதாகவும் தன்னை தன்பாட்டில் விடுமாறு கோருவதாகவும் அறியமுடிகின்றது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கியதால் எற்பட்ட மூச்சுத்திணறலினால் மரணம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.