இறப்பதற்கு முன் சுலைமானியின் கடைசி விநாடிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட இரகசியத் தகவல்

கடந்த 3ம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் இராணுவ மூத்த தளபதி சுலைமானி உயிரிழந்தார்.

அவரது கடைசி நிமிடங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பொதுமக்களிடம் தேர்தல் நன்கொடை வசூலித்து வருகிறார்.

புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள ட்ரம்பின் கேளிக்கை விடுதியில் தேர்தல் நன்கொடை வசூலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஈரான் தளபதி சுலைமானியின் கடைசி நிமிடங்கள் குறித்து ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் பேசியதாவது:

அமெரிக்கா குறித்து சுலைமானி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தார். அவரது அவதூறு பேச்சுகளை எத்தனை நாட்களுக்குதான் சகித்துக் கொள்ள முடியும். அவர் ஒரு தீவிரவாதி.

நமது எதிரிகளின் பட்டியலில் அவரும் இருந்தார். அவரை அழிக்க முடிவெடுத்தோம். அவர் மீது ஆளில்லா விமான தாக்குதலை நடத்திய அமெரிக்க இராணுவ அதிகாரிகள் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். அந்த அதிகாரிகள் ஒவ்வொரு விநாடியும் கள நிலவரத்தை விளக்கிக் கூறினர்.

‘சுலைமானி மற்றும் அவருடன் இருப்பவர்களின் கடைசி நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் 2 நிமிடங்கள் 11 விநாடிகள் மட்டுமே அவர்கள் உயிருடன் இருப்பார்கள். கவச வாகனத்தில் அவர்கள் செல்கின்றனர். இன்னும் ஒரு நிமிடம்.

30 விநாடிகள். 10, 9, 8…’ என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென பூம்ம்ம் என்ற சத்தம் கேட்டது. அதன்பிறகு அதிகாரிகள் கூறும்போது ‘அவர்கள் அழிந்து விட்டனர்’ என்று கூறி தொடர்பை துண்டித்தனர்.

அல் பாக்தாதி வேட்டை

இதற்கு முன்பு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி வேட்டையாடப்பட்டார்.

இறப்பதற்கு முன்பு பாக்தாதி கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை நமது வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வேட்டையில் என்னைவிட இராணுவ நாய் கானன் உலக அளவில் அதிக புகழ் அடைந்துவிட்டது என்றார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like