பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

“வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்தக் குற்றவாளிக்கு வழங்கப்படும் தீர்ப்பு அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக்காட்டினார்.
யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசலை ஒன்றில் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் தரம் 4இல் கல்வி கற்ற 9 வயது மாணவி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாடசாலை அதிபரே தன்னை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றின் உத்தரவில் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சந்தேகநபருக்கு எதிராக சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த் வழக்கை நெறிப்படுத்த, எதிரி சார்பில் சட்டத்தரணி பி.தவபாலன் முன்னிலையாகினர். இந்த நிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்று நியமிக்கப்பட்டது.
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சி முன்வைக்கப்பட்டது. அத்துடன், சிறுமியின் தாயார் மற்றும் அவரது நண்பியின் சாட்சிகளும் சிறுமியால் கூறப்பட்ட கதையாக மன்றில் முன்வைக்கப்பட்டன. 
எனினும் சிறுமி நடத்தை கெட்டவள் என்று எதிரி தரப்பால் மன்றில் புதுக்கதை சோடிக்கப்பட்டது. 9 வயதுச் சிறுமி 2 இளைஞர்களுடன் பாலியல் தொடர்பை வைத்திருந்தால் என அவளின் தாயார் கூறியதாக எதிரியும் அவரது மனைவியும் மன்றில் சாட்சியமளித்தனர். இந்த விடயம் இப்போதுதான் எதிரி தரப்பால் வெளிப்படுத்தப்படும் கதையாகும்.
 எனினும் எதிரி தரப்பால் மன்றில் முன்நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவியின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
எனவே சிறுமியால் கூறப்பட்ட சாட்சியத்தையும் மருத்துவ அறிக்கையையும் வைத்து இந்த மன்று எதிரியைக் குற்றவாளியாக அறிவிக்கின்றது.
குற்றவாளி பாடசாலை அதிபர். அவரின் கட்டுப்பாட்டுக்குள்தான் பாடசாலை உள்ளது. அவரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள்தான் மாணவி உள்ளார். அரச அலுவலர் ஒருவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களையோ சிறுவர்களையோ பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது கடுமையான குற்றமாகும். அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவது கட்டாயமானதாகும்” என்று நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.
“குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும். 
தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். தவறின் ஒரு மாதகால கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.