சுவிஸ் பெண்ணுடன் தொலைபேசி தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்து, இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன இன்று அரசு ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் கார்னியரை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்த சிஐடியினர், அவர் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் விதமாக நடந்ததாக தெரிவித்து, வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கார்னியர் சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து வருவதால், இராஜதந்திர சலுகைகள் தொடர்பான வியன்னா மாநாட்டின் பிரிவு 38 (2) இன் படி அவரது கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ய முடியாது என, கார்னியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

இருப்பினும், விசாரணை தொடர்பான தகவல்களுக்காக கையடக்க தொலைபேசியை அரசு ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டதாக மூத்த அரச சட்டவாதி தெரிவித்தார்.

இருப்பினும், வியன்னா மாநாட்டுச் சட்டத்தின் 38 (2) வது பிரிவின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளை பெற கார்னியருக்கு உரிமை உண்டு என்று நீதிவான் குறிப்பிட்டார்.

சுவிஸ் தூதரக பணியில் தலையிடாமல், இரகசிய அறிக்கையாக, கையடக்க தொலைபேசியின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், லேக் ஹவுஸில் பணிபுரிந்த தர்ஷா பாஸ்டியன் என்பவர் லக்னா பரணமண்ண என்ற பெயரில் தொலைபேசி சிம் பயன்படுத்தி கார்னியருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை அழைப்புகள் செய்யப்பட்டன என்றும், கிருஷாந்த கூரே என்பவரும் தொடர்பில் இருந்ததாக சிஐடியினர் மன்றில் தெரிவித்தனர்.

தர்ஷா பாஸ்டியன் மற்றும் கிருஷாந்த கூரே ஆகியோர் வெளிநாடு சென்றதாகவும் பொலிசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர். விசாரணை பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.