விடுதலைப் புலிகளின் தலைவரை பின்பற்றும் கோட்டாபய?

அண்மையில் ஆட்சிக்கட்டில் ஏறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணியை பின்பற்றி சில காரியங்களை ஆற்றி வருவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களை முன்னாள் இராணுவ அதிகாரிகளை வைத்தே நிரப்பிவருகின்றார் கோட்டாபய ராஜபக்ச.

அரசியல் சார்ந்த அல்லது நிர்வாகம் சார்ந்த பதிவி நிலைகளுக்குக்கூட, இலங்கை இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய அதிகாரிகளையே அவர் நியமித்து வருகின்றார்.

2009 இற்கு முன்னரான காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும், அந்த காலத்தில் சிவில் நிர்வாக, அரசியல், நீதித்துறைகளுக்கு தமது போராளிகளை, அல்லது முன்னாள் போராளிகளையே நியமித்து வந்துள்ளார்கள் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகள் சார்ந்த அத்தனை சிவில் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் போராளிகளையே நியமித்து வந்தார்கள். ஊடகத்துறை,கலைத்துறை, புகைப்படத்துறை போன்றனவற்றிற்குக்கூட அவர்கள் போராளிகளையே நியமித்து வந்தார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கிய தேசிய ஊடகங்களுக்கு பொறுப்பாளர்களாக வன்னியில் இருந்து போராளிகள் வந்து செயற்பட்டிருந்தார்கள். அந்த துறை பற்றிய துறைசார் பரிட்சயம் இல்லாத நிலையில் கூட, போராளிகளே அனைத்திலும் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்பது ஒருவித நிகழ்ச்சி நிரலாகப் பேணி வந்தார்கள் விடுதலைப் புலிகள்.

போராளிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது ஒரு காரணம். தலைமைக்கு நம்பிக்கையாக, விசுவாசமாக இருப்பார்கள் என்பது மற்றொரு காரணம். கட்டளைகளுக்கு -அது எப்படிப்பட்ட கட்டளையாக இருந்தாலும் கீழ்படிபவர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

இந்த நடைமுறை தற்போதைய இலங்கை ஜனாதிபதியினாலும் பின்பற்றப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, தற்பொழுது மாவட்ட ரீதியாக 500 முன்நாள் ராணுவ வீரர்களை உள்வாங்கி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுவரும் ‘வியத்கம’ அமைப்பும், முன்னர் விடுதலைப் புலிகளின் இணக்கசபை, அபிவிருத்திக் குழு போன்ற மக்கள் செயற்பாடுகளின் மாதிரியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவே நோக்கர்கள் சுட்டிக்காண்பிக்கின்றார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்த வியத்கம உறுப்பினர் 75 பேருக்கு வேட்பாளர் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆடம்பரம்- வீண் விரயம் இல்லாத செயற்பாடுகள், மக்கள் கோணத்தில் இருந்தே அனைத்தையும் அணுகுகின்ற பாங்கு, தனது குடும்பத்தை முன்நிலைப்படுத்தாத செயற்பாடு, அதீத சுத்தத்தை விரும்புகின்ற மனப்பாங்கு.. இவை அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த விடயங்களே என்று சுட்டிக்காண்பிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.